2026 டி20 உலகக் கோப்பைத் தொடரில் தென்னாப்பிரிக்காவிடம் இந்திய அணி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் சூர்யகுமார் யாதவ், அபிஷேக் சர்மா போன்ற வீரர்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றனர்.
இதற்குப் பதிலடி கொடுத்துள்ள வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, வீரர்களை உருவகப்படுத்தி மீம்ஸ் போடுவதையும் தரம் தாழ்ந்து விமர்சிப்பதையும் ரசிகர்கள் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
ஒரு வீரர் சறுக்கலைச் சந்திக்கும்போது அவருக்குத் துணையாக நிற்பதே உண்மையான ரசிகரின் அழகு என்றும், இந்திய அணியின் மிகச்சிறந்த ஆட்டம் இன்னும் வெளிவரவில்லை, அது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முக்கியமான போட்டியில் நிச்சயம் நடக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஷமியின் இந்த கருத்துக்குப் முன்னாள் இந்திய மகளிர் அணி கேப்டன் மிதாலி ராஜும் தனது ஆதரவை வழங்கியுள்ளார். வெளியில் இருந்து கொண்டு விமர்சிப்பது எளிது என்றும், ஆனால் ஒரு அணியாக இக்கட்டான சூழலில் அவர்களுக்கு ஆதரவு அளிப்பது தான் முக்கியம் என்றும் அவர் கூறியுள்ளார்.
சூப்பர் 8 சுற்றில் அரையிறுதி வாய்ப்பைத் தீர்மானிக்கும் வாழ்வா சாவா ஆட்டத்தில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸை எதிர்கொள்ள உள்ள நிலையில், தேவையற்ற ட்ரோல்களைத் தவிர்த்துவிட்டு வீரர்கள் தங்களது முழுத் திறமையை வெளிப்படுத்த ரசிகர்கள் ஊக்கம் அளிக்க வேண்டும் என்பதே முன்னாள் வீரர்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது.