மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியதைக் கண்டு, பாகிஸ்தானைச் சேர்ந்த தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஒருவர் ஆத்திரத்தில் ஸ்டுடியோவில் இருந்த டிவியை உடைத்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பரபரப்பான ஆட்டத்தில் இந்திய வீரர் வெற்றி ரன்களை எடுத்தவுடன், ஸ்டுடியோவில் இருந்த அந்த தொகுப்பாளர் திடீரென தனது இருக்கையிலிருந்து குதித்து கத்தத் தொடங்கினார். கட்டுபாட்டு அறையில் இருப்பவர்களிடம் தொலைக்காட்சியை உடனடியாக அணைக்குமாறு ஆவேசமாக உத்தரவிட்டார்.
அத்துடன் நில்லாமல், நேரலை கேமராக்கள் ஓடிக்கொண்டிருக்கும் போதே ஆக்ரோஷமாக எழுந்து சென்று, அங்கிருந்த டிவி திரையைத் தூக்கித் தரையில் வீசி எறிந்தார். இதனால் ஸ்டுடியோவில் இருந்த மற்றவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
டிவியை உடைத்த பிறகு, அந்தத் தொகுப்பாளர் தனது இருக்கையில் அமர்ந்து தேம்பித் தேம்பி அழத் தொடங்கினார். அவருடன் ஸ்டுடியோவில் இருந்த மற்ற இரண்டு வல்லுநர்கள் அவரை சமாதானப்படுத்த முயன்றனர்.
“அமைதியாக இருங்கள், இது நேரலை ஒளிபரப்பு… இதில் கவனம் செலுத்துங்கள்” என்று அவர்கள் பலமுறை அறிவுறுத்தியும், அவரது அழுகை குறையவில்லை. இந்தியாவின் வெற்றியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அவர் வெளிப்படுத்திய இந்த அதீத உணர்ச்சி வீடியோவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது.
இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. ஆயிரக்கணக்கானோர் இந்த வீடியோவைப் பகிர்ந்து வருவதுடன், இது தொடர்பாக பல்வேறு மீம்ஸ்களும் நகைச்சுவையான கருத்துகளும் சமூக வலைதளங்களில் குவிந்து வருகின்றன.
இருப்பினும், இந்த வீடியோ சமீபத்தில் நடந்த போட்டியின் போது எடுக்கப்பட்டதா அல்லது பழைய வீடியோவா என்பது குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. விளையாட்டுத் துறையில் வெற்றியும் தோல்வியும் சகஜம் என்றாலும், ஒரு செய்தித் தொகுப்பாளர் நேரலையில் இப்படி நடந்துகொண்டது விளையாட்டு ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.