மு.க.அழகிரி ஆதரவாளர்கள், செல்லூர் ராஜுவிடம் ஐக்கியம்.. எம்.எல்.ஏ, சீட்டுக் கணக்கு கை கொடுக்குமா?
அருண் சின்னதுரை March 02, 2026 06:14 PM

பி.எம்.மன்னன் மற்றும் எஸ்.ஆர்.கோபி உள்ளிட்டோர்க்கு பெரிய அளவு செல்வாக்கு இல்லை என்பதும், அ.தி.மு.கவின் அரசியல் உளவுத்துறை கணிப்பாக இருக்கும். - என்கின்றனர்.

தமிழக சட்ட மன்ற தேர்தல் 2026
 
தமிழகத்தில் 2026 சட்ட மன்ற தேர்தல் அறிவிப்பிற்கு முன்பாகவே, தேர்தல் களம் சூடு பிடித்து காண்கிறது. கோடை வெயிலின் முகம் தென்பட்டு வருகிறது. வெயிலின் தாக்கத்தை தாண்டி தி.மு.க., கூட்டணி ஒரு பக்கமும், அ.தி.மு.க. - பா.ஜ.க., உள்ளிட்ட கூட்டணி ஒரு பக்கமும், புதிதாக அரசியல் களம் காணும் தமிழக வெற்றிக் கழகம் ஒருபக்கமும், வேட்பாளர்களை அறிமுகம் செய்து பணி செய்துவரும் நாம் தமிழர் கட்சி ஒரு பக்கமும் என பலமாக பணி செய்து வருகின்றனர். 
 
அழகிரி ஆதரவாளர் டூ செல்லூர் ராஜு ஆதரவாளர்கள்
 
 ஓ.பி.எஸ்., திமுகவில் இணைந்தது அரசியல் வட்டாரங்களில் தற்போது பரபரப்பாக பார்க்கப்படுகிறது. அதே போல் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சார்பாக பிரதமர் நரேந்திர மோடி மதுரையில் பரப்புரை மேற்கொண்டு மேற்கொண்டதும் கவனம் பெற்றுள்ளது. இந்நிலையில் அரசியல் தலைநகரமான மதுரையில் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகளும் கூட்டணி பொதுக்கூட்டம் மற்றும் மாநாடுகள் நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் அதிமுகவில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் சேர்ந்ததும் கவனம் பெற்றுள்ளது. குறிப்பாக திமுகவில் இருந்து நீக்கப்பட்ட அழகிரியின் வலது கரம் என சொல்லப்பட்ட பி.எம் மன்னன் மற்றும் எஸ்.ஆர் கோபி எடப்பாடி பழனிசாமி முன்னிளையில் இணைந்தது பேசு பொருளானது. திமுகவில் மீண்டும் தங்களை தலைமை இணைய அனுமதிக்கவில்லை என்பதால் அழகிரி ஆதரவாளர்களான, இவர்கள் செல்லூர் ராஜு ஆதரவாளராக மாறியுள்ளது, அதிமுக வட்டாரத்தில் பேசு பொருளாக உள்ளது.
 
அதிமுகவில் - அழகிரி ஆதரவாளர்களுக்கு சீட்?
 
அ.தி.மு.கவின் மதுரை மாநகர் மாவட்ட செயலாளராக செல்லூர் ராஜு இருந்து வருகிறார். இவர் மாநகர் பகுதிகளை கவனித்து வருகிறார். இந்த சூழ்நிலையில் மாநகர் பகுதியில் உள்ள சட்டமன்றத் தொகுதியை சீட் கிடைக்கும் என பி.எம் மன்னன் மற்றும் எஸ்.ஆர் கோபி ஆகியோர் கணக்கு போட்டு அதிமுகவில் இணைந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் செல்லூர் ராஜுவின் வலது மற்றும் இடது கரமாக போல் செயல்படவேண்டும், அப்போது தான் நமக்கு சீட் கிடைக்கும் என காய்களை நகர்த்தி வருகின்றனர். ஆனாலும் இவர்களுக்கு செல்லூர் ராஜு எம்.எல்.ஏ சீட்டுகளை தலைமை இடம் பேசி பெற்றுத் தருவாரா என்பது சந்தேகம்தான் என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே அதிமுகவில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ரத்தத்தின் ரத்தங்களுக்கு சீட்டு கொடுக்காமல், திடீரென்று வாய்ப்பு கிடைக்கவில்லை என அதிமுகவில் இணைந்த அழகிரியின் ஆதரவாளர்களுக்கு சீட் கொடுத்தால் கண்டிப்பாக அதிமுக சலசலப்பு ஏற்படும் எனவும் கூறுகின்றனர்.
 
சீட்டுக்கு வாய்ப்பே இல்லை
 
இது குறித்து அதிமுக முக்கிய நிர்வாகி ஒருவர் நம்மிடம் பேசுகையில்...,” செல்லூர் ராஜு பிரபலமான அரசியல் தலைவர் என்றாலும் அவரை எடப்பாடி பழனிசாமி தலைமை சீரியஸ்சாக பார்க்கவில்லை. ஈ.பி.எஸ்.,இன் குட் புக்கில் செல்லூர் ராஜுவிற்கு இடம் இல்லாமல் உள்ளது. இவருக்கு மறைமுக போட்டியாக மதுரையில் டாக்டர்.சரவணன் செயல்பட்டு வருவதும் குறிப்பிடதக்கது. சீனியர் நிர்வாகி, முன்னாள் அமைச்சர் என்ற பார்வையில் மட்டுமே செல்லூர் ராஜு சுகந்திரமாக செயல்பட முடிகிறது. மேல் இடத்தில் இவர் பேச்சு பெருசாக எடுபடாது. எனவே செல்லூர் ராஜு தனக்கும், தன்னை பல ஆண்டுகள் நம்பியுள்ள ஒரு, சிலருக்கு மட்டுமே சீட்டிற்கு முயற்சி செய்ய முடியும் என்பதால் அழகிரி ஆதரவாளர்களுக்கு சீட்டு வாங்கிக் கொடுப்பது குதிரை கொம்பு என்பதால் அந்த விஷப் பரிட்சை செய்ய மாட்டார் என்றும். அதே போல் மக்கள் மத்தியில், பி.எம்.மன்னன் மற்றும் எஸ்.ஆர்.கோபி உள்ளிட்டோர்க்கு பெரிய அளவு செல்வாக்கு இல்லை என்பதும் அதிமுகவின் உளவுத்துறை கணிப்பாக இருக்கும்” என்றும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
 
திமுகவில் மீண்டும் அழகிரி ஆதரவாளர்களை இணைத்தால் கட்சியில் சலசலப்பு ஏற்படும் என திமுக தவிர்த்த சூழலில், கோபத்தில் அதிமுவில் இணைந்துள்ளனர் அழகிரியின் ஆதரவாளர்கள். இதனால் இவர்களின் எம்.எல்.ஏ., சீட்டு கணக்கு எடுபடாது என தகவல்கள் கிடைக்கின்றன.
 
© Copyright @2026 LIDEA. All Rights Reserved.