நெகிழ்ச்சி... 5 சவரன் நகையை ஒப்படைத்த தொழிலாளிக்குக் குவியும் பாராட்டு!
Dinamaalai March 02, 2026 08:48 PM

விருதுநகர் மாவட்டம் சிவகாசி நகர் பகுதியைச் சேர்ந்த ஹேமலதா என்பவர், அங்குள்ள சிவன் கோயிலில் நடைபெற்ற பிரதோஷ பூஜையில் கலந்துகொண்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாகத் தனது பர்ஸைத் தவறவிட்டுள்ளார். அந்தப் பர்ஸில் 5 சவரன் தங்க நகைகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் இருந்துள்ளன. அப்போது விளாம்பட்டி பகுதியைச் சேர்ந்த சின்ன கருப்பசாமி என்ற பட்டாசு கூலித்தொழிலாளி, சாலையில் கிடந்த அந்தப் பர்ஸைக் கண்டெடுத்துள்ளார். வறுமையிலும் நேர்மை மாறாத அவர், அந்தப் பர்ஸைத் திறக்காமல் உடனடியாக சிவகாசி நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

காவல்துறையினர் அந்தப் பர்ஸைச் சோதித்த போது, அதில் இருந்த முகவரி மற்றும் தொலைபேசி எண்களின் அடிப்படையில் ஹேமலதாவைத் தொடர்பு கொண்டனர். தொலைந்து போன நகைகள் பத்திரமாக இருப்பதை அறிந்த ஹேமலதா நெகிழ்ச்சியுடன் காவல் நிலையம் வந்து தனது நகைகளைப் பெற்றுக் கொண்டார்.

கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தினாலும், அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாத சின்ன கருப்பசாமியின் உயரிய பண்பைக் கண்டு காவல்துறையினர் வியந்தனர். சிவகாசி காவல் ஆய்வாளர், சின்ன கருப்பசாமியின் நேர்மையைப் பாராட்டி அவருக்குப் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், "நேர்மைக்கு வறுமை ஒரு தடையல்ல" எனப் பொதுமக்கள் சின்ன கருப்பசாமியை வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.