ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்தி வரும் கூட்டுத் தாக்குதல் இன்று மூன்றாவது நாளாக நீடிக்கிறது. சனிக்கிழமை தொடங்கிய இந்த வான்வழித் தாக்குதலில் இதுவரை 555 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஈரானிய ரெட் கிரசண்ட் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஈரானின் 131 நகரங்கள் இந்த கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. ஈரானின் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக அந்நாட்டுப் படைகளும் அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தொடர் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
இந்த மோதலில் அமெரிக்காவிற்கு ஆதரவாக பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் கைகோர்த்துள்ளன. வளைகுடா நாடுகள் மீது ஈரான் நடத்தி வரும் தாக்குதலுக்கு இந்தியாவும் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
மத்திய கிழக்கு ஆசியப் பகுதியில் போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இஸ்ரேல் தனது தாக்குதலை லெபனான் நாட்டின் மீதும் விரிவுபடுத்தியுள்ளது. ஹெஸ்பொல்லா அமைப்பின் தலைவர் நைம் காசெம் இனி தங்களின் இலக்கு என்றும் அவரை ஒழிப்பதே நோக்கம் என்றும் இஸ்ரேல் அதிரடியாக அறிவித்துள்ளது.
வளைகுடா நாடுகள் ஈரானுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்த போதிலும் ஈரான் தனது தாக்குதல் நடவடிக்கைகளைக் குறைப்பதாகத் தெரியவில்லை. வல்லரசு நாடுகளின் தலையீடு மற்றும் அண்டை நாடுகளின் கண்டனங்களுக்கு மத்தியிலும் இரு தரப்பிலும் தாக்குதல்கள் தீவிரமடைந்து வருவதால் இப்பகுதியில் அமைதியற்ற அசாதாரண சூழல் தொடர்ந்து நீடிக்கிறது.