இன்று முழு சந்திர கிரகணம்... தமிழகத்தில் முக்கிய கோயில்கள் நடை அடைப்பு!
Dinamaalai March 03, 2026 09:48 AM

தமிழகத்தில் இன்று மாலை நிகழவுள்ள முழு சந்திர கிரகணத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன், திருச்சி ஸ்ரீரங்கம், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் உள்ளிட்ட முக்கியத் திருக்கோவில்களின் நடை சாத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2026ம் ஆண்டின் முதல் முழு சந்திர கிரகணம் இன்று நிகழவுள்ளது. இந்த வானியல் நிகழ்வின் போது ஆன்மிக நடைமுறைப்படி கோவில்களின் நடை சாத்தப்படுவது வழக்கம். சந்திர கிரகணத் தொடக்கம்  இன்று பிற்பகல் 3:20 மணிக்கு துவங்கி மாலை 6:47 மணிக்கு நிறைவடைகிறது. சுமார் 3 மணி நேரம் 27 நிமிடங்கள் சந்திரகிரகணம் நீடிக்கிறது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நடை காலை 8:20 மணி பூஜைகள் முடிந்தவுடன் சாத்தப்படுகிறது. அதன் பின்னர் மீண்டும் இரவு 7:30 மணிக்கு திறக்கப்படும்.  கிரகணம் முடிந்த பிறகு கோவில் வளாகம் சுத்தம் செய்யப்பட்டு, பரிகார பூஜைகள் முடிந்த பின்னரே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் நடை காலை 8:20 மணிக்கு சாத்தப்படும். மீண்டும் இரவு 7:35 மணிக்கு திறக்கப்படும். கிரகண காலத்திற்குப் பிந்தைய விசேஷ பூஜைகள் முடிந்த பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.

சோலைமலை முருகன் கோவில் (அழகர்கோவில்) நடை மதியம் 1  மணிக்கு சாத்தப்படும். மீண்டும் மறுநாள் மார்ச் 4ம் தேதி அதிகாலை 5:30 மணிக்கு திறக்கப்படும். இந்த ஒரு நாள் மட்டும் இரவு தரிசனம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

கிரகண காலத்தின் போது கோவில்கள் மட்டுமல்லாது பெரும்பாலான அன்னதானக் கூடங்களும் செயல்படாது. இன்று பிரபல கோயில்களுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள், வெளியூர் பக்தர்கள் இந்த நேர மாற்றத்தைக் கருத்தில் கொண்டு தங்களது பயணத்தைத் திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கிரகணம் முடிந்த பிறகு இரவு நேரங்களில் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதால், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கோவில் நிர்வாகங்கள் செய்துள்ளன.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.