முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் மீண்டும் இணைய எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், தற்போது அவர் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்துள்ளார். எடப்பாடி பழனிசாமி அவரைச் சேர்த்துக்கொள்ள திட்டவட்டமாக மறுத்ததால், வேறு வழியின்றித் தனது அரசியல் எதிர்காலத்தைக் கருதி இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்.
அவருடன் அவரது மகன் ரவீந்திரநாத் மற்றும் முக்கிய ஆதரவாளர்களான ஐய்யப்பன் எம்.எல்.ஏ, முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன் ஆகியோரும் திமுகவில் இணைந்துள்ளனர்.
ஓ.பன்னீர்செல்வத்தின் செல்வாக்கு மற்றும் வாக்கு வங்கியைப் பயன்படுத்திக்கொள்ள விரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரை வரவேற்பதில் மிகுந்த ஆர்வம் காட்டினார். வரும் மார்ச் 7-ம் தேதி மதுரை அருகே நடைபெறவுள்ள பிரம்மாண்ட விழாவில், தமிழகம் முழுவதும் உள்ள ஓபிஎஸ் ஆதரவாளர்கள் முதல்வர் முன்னிலையில் திமுகவில் இணைய உள்ளனர்.
இதற்கான பேச்சுவார்த்தைகளை அமைச்சர் சேகர் பாபுவும், முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணனும் முன்னின்று நடத்தியுள்ளனர். இந்த இணைப்பிற்காக ஓபிஎஸ் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை என்றாலும், அவருக்குக் கட்சியில் உரிய மரியாதையும், அமைச்சரவையில் முக்கியப் பொறுப்பும் வழங்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
ஓபிஎஸ் உடன் வந்த ஆதரவாளர்களுக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், எதிர்காலத்தில் உள்ளாட்சித் தேர்தல், வாரியப் பதவிகள் அல்லது நாடாளுமன்றப் பதவிகளில் உரிய அங்கீகாரம் வழங்கப்படும் என திமுக தலைமை உறுதி அளித்துள்ளது.
குறிப்பாகத் தர்மயுத்தம் தொடங்கிய காலம் முதல் அவருடன் உறுதியாக நின்றவர்களுக்கு உரிய கட்சிப் பதவிகள் வழங்கப்படும் எனத் தெரிகிறது. ஓபிஎஸ்-ன் இந்த அதிரடி மாற்றம் வரும் தேர்தலில் தென் மாவட்ட அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.