சாப்பிடும்போது மொபைல் போன் பயன்படுத்துவதால் என்ன பிரச்னை வரும்? – மருத்துவர்கள் எச்சரிக்கை
TV9 Tamil News March 04, 2026 02:48 AM

இன்றைய காலகட்டங்களில், மொபைல் போன்கள் நம் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டன. இதன் காரணமாக, நாள் முழுவதும்  ஸ்மார்ட்போன்கள் இல்லாமல் இருக்க முடியவில்லை . குறிப்பாக நம்மில் பலர் சாப்பிடும்போது கூட நம் போன்களைப் பயன்படுத்த துவங்கியிருக்கிறோம். இருப்பினும், இது ஒரு சரியான பழக்கம் இல்லை என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக, உணவில் கவனம் செலுத்த வேண்டும், நம் உணவை மெதுவாக  ருசித்து சாப்பிட வேண்டும் என்று தெரிவிக்கின்றனர். இது நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. கடந்த காலங்களில் நம் வீட்டு பெரியவர்கள் இப்படி சாப்பிடுவதால் தான்  ஆரோக்கியமாக இருந்தார்கள் என்று தெரிவிக்கிறார்கள்.

ஆனால் இன்றைய காலக்கட்டங்களில், சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கிட்டத்தட்ட அனைவரும் சாப்பிடும்போது டிவி மற்றும் மொபைல் போன்களை பயன்படுத்துகிறார்கள். அதனால்தான் சாப்பிடும்போது மொபைல் போன்களைப் பார்க்கும் பழக்கம் ஆரோக்கியத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சமூக ஊடகங்களில் ரீல்கள் மற்றும் வீடியோக்களை ஸ்க்ரோல் செய்து கொண்டே நீங்கள் சாப்பிடுகிறீர்களா? இந்தப் பழக்கம் உங்களை எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்து தெரிந்துகொள்வோம்.

இதையும் படிக்க : கோடைகாலம் தொடங்குது? தினமும் வெந்நீர் குடிப்பது சரியானதா?

மொபைல் போனை பார்த்தபடி சாப்பிட்டால் என்ன நடக்கும்?

உடல் பருமன் அதிகரிப்பு

சாப்பிடும்போது டிவி  அல்லது உங்கள் மொபைல் போனைப் பார்ப்பது நம்மை உணவில் இருந்து திசை திருப்புகிறது. இது நம்மை அறியாமலேயே அதிகமாக சாப்பிட வைக்கிறது. இது நமது செரிமான அமைப்பை பாதிக்கிறது. உணவை எளிதில் ஜீரணிக்க முடியாது. இது பின்னர் உடல் பருமனுக்கு வழிவகுக்கிறது.

செரிமான பிரச்சினைகள்

டிவி பார்க்கும் போது அல்லது மொபைல் போன் பயன்படுத்தும் போது சாப்பிடுவது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. உணவை சரியாக மெல்லாவிட்டால், செரிமானம் சரியாக நடக்காது. மலச்சிக்கல், வயிற்று வலி மற்றும் அஜீரணம் போன்ற பிரச்சனைகள் எழுகின்றன.

நீரிழிவு நோய் ஆபத்து

சாப்பிடும்போது மொபைல் போனைப் பயன்படுத்துவது நீரிழிவு நோயின் அபாயத்தை கணிசமாக அதிகரிக்கிறது. ஏனெனில் டிவி பார்க்கும் போது அல்லது மொபைல் போன் பார்க்கும் போது சாப்பிடுவது வளர்சிதை மாற்றத்தை மெதுவாக்குகிறது. இது உணவு சரியாக  செரிமானமாவதை தடுக்கிறது. இது நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கிறது.

இதையும் படிக்க : குறட்டை பிரச்னையை சட்டுனு குறைக்கலாம்.. கிச்சனில் இருக்கும் தீர்வு முறை!

சாப்பிடும்போது நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள்
  • சாப்பிடும்போது டிவி அல்லது தொலைபேசியைப் பயன்படுத்தாமல் கவனமாக இருக்க வேண்டும்.
  • சாப்பிடும்போது உணவில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். பேசக்கூடாது. தொலைபேசியைப் பார்க்கக்கூடாது.
  • உணவை மெதுவாக மெல்ல வேண்டும். இது உணவு எளிதில் ஜீரணிக்க உதவுகிறது.
  • சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்கக்கூடாது. இது செரிமான செயல்பாட்டை பாதிக்கலாம்.
© Copyright @2026 LIDEA. All Rights Reserved.