Strait of Hormuz : `ஹோர்முஸ் நீரிணையை மூடும் ஈரான் - உலகப் பொருளாதாரத்தையே ஆளும் சிறிய பகுதி!
Vikatan March 04, 2026 02:48 AM
ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மூடுவதற்கு ஈரான் உத்தரவிட்டுள்ளது. இந்தச் செய்தி, வர்த்தக உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு சிறிய பகுதியான ஹோர்முஸ் நீரிணை, எப்படி உலக வர்த்தகத்துக்கு மிக முக்கியமான வழித்தடமாக இருக்கிறது என்பதை பற்றிப் பார்ப்போம்.
Strait of Hormuzஹோர்முஸ் நீரிணை

பழங்காலத்தில் இருந்தே ஹோர்முஸ் நீரிணை ஒரு முக்கிய வர்த்தக வழித்தடமாக இருந்திருக்கிறது. பாரசீக, கிரேக்க மற்றும் அரபு வர்த்தகர்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாக பட்டு, முத்து மற்றும் மசாலா பொருள்களை வர்த்தகம் செய்திருக்கின்றனர். பழைமை வாய்ந்த பாரசீக நகரான ஹோர்முஸ் நகரத்தின் பெயரில்தான் இந்த நீரிணை அமைந்துள்ளது. அந்தக் காலத்திலேயே ஹோர்முஸ் ஒரு முக்கியமான துறைமுக நகரம்.

ஹோர்முஸ் நீரிணை வரைபடம்

ஹோர்முஸ் நீரிணையின் வடக்கில் ஈரானும், தெற்கில் ஐக்கிய அரபு நாடுகளும் இருக்கின்றன. இந்த சிறிய பகுதி உலகப் பொருளாதாரத்தையே தனது உள்ளங்கையில் வைத்திருக்கிறது. ஹோர்முஸ் நீரிணையை தாண்டிதான் பாரசீக வளைகுடாவுக்குச் செல்ல முடியும். கத்தார், குவைத், பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகளுக்கும் ஹோர்முஸ் நீரிணையைத் தாண்டிதான் கப்பல்கள் செல்ல முடியும்.

உலகின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் சப்ளையில் 20 சதவிகிதம் ஹோர்முஸ் நீரிணை வழியாகத்தான் நடக்கிறது. ஒரு நாளுக்கு 2 கோடி பேரல்கள் கச்சா எண்ணெய் இதன் வழியாக வர்த்தகமாகின்றன. மேலும், உலகின் ஒட்டுமொத்த எல்.என்.ஜி எரிவாயுவில் கால் பங்கு ஹோர்முஸ் நீரிணை வழியாக வர்த்தகமாகிறது.

பாரசீக வளைகுடா, கச்சா எண்ணெய் வளம் மிகுதியான பகுதி. இந்த பாரசீக வளைகுடாவையும், ஓமான் வளைகுடாவையும், அரபிக்கடலையும் இணைக்கும் புள்ளிதான் ஹோர்முஸ் நீரிணை.

2024ம் ஆண்டிலும், 2025ம் ஆண்டின் முதல் காலாண்டிலும் உலகின் கால் பங்கு கடல்வழி எண்ணெய் வர்த்தகம் ஹோர்முஸ் நீரிணை வழியாக நடந்திருக்கிறது. சவூதி அரேபியா, ஈரான், ஈராக், குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார் ஆகிய நாடுகளின் எல்.என்.ஜி எரிவாயுவும் இதன் வழியாக வர்த்தகமாகின்றன.

இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் ஹோர்முஸ் நீரிணை வழியாக சப்ளை செய்யப்படும் கச்சா எண்ணெய் இந்தியா, சீனா, ஜப்பான், தென் கொரியா போன்ற ஆசிய நாடுகளுக்குதான் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கச்சா எண்ணெய் தவிர உணவுப் பொருள்கள், கெமிக்கல்ஸ், விவசாய உற்பத்திப் பொருள்கள், எத்தனால், எலெக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு சரக்குகள் ஹோர்முஸ் நீரிணை வழியாக வர்த்தகமாகின்றன.

ஹோர்முஸ் நீரிணை தொடர்ந்து மூடப்பட்டால் கச்சா எண்ணெய் சப்ளை தடைபடுவது மட்டுமல்லாமல் தினசரி தேவைகளுக்கு அவசியமான பல்வேறு சரக்குகளின் விலை உயர்ந்து சர்வதேச அளவில் பாதிப்பு இருக்கும்.

ஹோர்முஸ் நீரிணை ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவது சாத்தியமா?

ஹோர்முஸ் நீரிணை ஈரானுக்குச் சொந்தமானதல்ல. நீரிணையின் வடக்குப் பகுதியில் ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள கடல்பகுதி இருக்கிறது. தென்பகுதியோ ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமான் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. ஈரானுக்குச் சொந்தமில்லாத ஹோர்முஸ் நீரிணையில், பல ஆண்டுகளாக ஈரான் தனது ஆதிக்கத்தையும், ராணுவ பலத்தையும் வளர்த்து வைத்திருக்கிறது.

உதாரணமாக, ஈரான் கடற்படை வேகமாக தாக்கக்கூடிய படகுகள், நீர்மூழ்கிக் கப்பல்கள், ஆழ்கடல் குண்டுகள் போன்றவற்றை ஹோர்முஸ் நீரிணை பகுதியில் இயக்கி வருகிறது. சீனாவால் தயாரிக்கப்பட்ட இ.எம்-52 ஆழ்கடல் குண்டு உட்பட ஆயிரக்கணக்கான ஆழ்கடல் குண்டுகளை ஈரான் இப்பகுதியில் வைத்திருக்கிறது. இதுதவிர, ஈரானின் கடலோர நிலப்பரப்புகளில் ஏவுகணை, டிரோன் போன்ற ராணுவ அமைப்புகளும் இருக்கின்றன.

ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் ஏற்கெனவே கப்பல்களுக்குத் தொல்லை கொடுத்த வரலாறு இருக்கிறது. 1980களில் ஈரான் – ஈராக் போரின்போது, இரு நாடுகளுமே 400க்கும் மேற்பட்ட கப்பல்களை தாக்கின. ஆனால், வர்த்தகம் நடந்துகொண்டுதான் இருந்தது. சமீபகால உதாரணமாக, 2019ம் ஆண்டில் ஒரு பிரிட்டிஷ் டேங்கர் கப்பலை ஈரான் கைப்பற்றியது. 2022ம் ஆண்டில் இரண்டு கிரீஸ் நாட்டு கப்பல்களை கைப்பற்றியது. 2024ம் ஆண்டில் இஸ்ரேலுடன் தொடர்புடைய ஒரு கப்பலைப் பிடித்தது. பெரும்பாலும் பதிலடி கொடுப்பதற்காகவே கப்பல்களை ஈரான் கைப்பற்றியுள்ளது. இதுபோன்ற காரணங்களால்தான் ஹோர்முஸ் நீரிணையில் ஈரானின் ஆதிக்கம் வலுவாக காணப்படுகிறது.

முன்னதாக கடந்த ஆண்டு, ஈரானின் ராணுவ மற்றும் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதல் நடத்தியுள்ளன. இதைத் தொடர்ந்து, கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்த ஈரான் முயன்றது். இதனால், மத்தியக் கிழக்கில் பதற்றம் அதிகரித்து காணப்பட்டது. அப்போதும் ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவது குறித்த பேச்சுகள் எழுந்தது.

சீனா ஈரானின் நட்பு நாடு. ஈரானிடம் இருந்து மிக அதிகளவில் கச்சா எண்ணெய்யை சீனா வாங்குகிறது. சீனாவின் 47% கச்சா எண்ணெய் தேவையை வளைகுடா நாடுகள்தான் பூர்த்தி செய்கின்றன. மத்தியக் கிழக்கில் பதற்றம் குறைய வேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது. எனவே, ஹோர்முஸ் நீரிணையை மூடுவதற்கு சீனா ஆதரவு தெரிவிக்காது.

ஹோர்முஸ் நீரிணை வழியான வர்த்தகத்தில் இடையூறு ஏற்பட்டால் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை எகிறிவிடும்.

இந்தியாவைப் பொறுத்தவரை சில வாரங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் இருப்பில் இருக்கும், இதுமட்டுமல்லாமல், அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிடம் இருந்தும் இந்தியாவால் எண்ணெய் வாங்க முடியும். ஆனால், கச்சா எண்ணெய் விலை லேசாக உயர்ந்தாலும் இந்தியாவுக்கு நிச்சயமாக பாதிப்பு இருக்கும். ஈரான் போரைப் பொறுத்தவரை, அரசியல் ரீதியாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பதே ஒரே வழி! அதுதான் உலக வர்த்தகத்துக்கும் நல்லது!
இஸ்ரேல் - ஈரான் பிரச்னையால் தவிக்கும் அரிசி ஏற்றுமதியாளர்கள்! பங்குகள் விலை என்னவாகும்?
© Copyright @2026 LIDEA. All Rights Reserved.