மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் ராஜினாமா செய்ததை அடுத்து ஆளுநர்கள் வரிசையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அனந்த் போஸுக்கு பதிலாக தமிழக ஆளுநராக உள்ள ரவீந்திர நாராயண் ரவி, மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனை உள்துறை அமைச்சர் தம்மிடம் கூறியதாக மம்தா பானர்ஜி அதிர்ச்சிகரமாக சமூகத் தளங்களில் பதிவு செய்துள்ளார்.
மேற்கு வங்க சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அங்கே அரசியல் களம் விறுவிறுப்பாக உள்ளது. இந்நிலையில் அந்த மாநில ஆளுநராக உள்ள சி.வி ஆனந்த போஸ் தனதுபதவியை ராஜினாமா செய்துள்ளார். தற்போது தில்லியில் இருக்கும் அவர், ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார். அவர் மேற்கு வங்க ஆளுநராக சுமார் மூன்றரை ஆண்டுகள் பதவி வகித்துள்ளார். தாம் ராஜினாமா செய்ததை உறுதி செய்துள்ள ஆனந்த போஸ், ஆளுநர் பதவியில் போதுமான காலம் இருந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
1977ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான அவர், கடந்த 2022 நவ.23ல் மேற்கு வங்கத்தின் 21வது ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவருக்கும் முதல்வர் மம்தாவுக்கும் தொடக்கம் முதலே மோதல் போக்கு இருந்து வந்தது.
இது தொடர்பாக மம்தா வெளியிட்ட அறிக்கையில்,
மேற்கு வங்க ஆளுநர் பதவியில் இருந்து ஆனந்த போஸ் திடீரென ராஜினாமா செய்தது அதிர்ச்சியளிக்கிறது. அவரது ராஜினாமாவுக்கான காரணம் குறித்து இதுவரை தெரியவில்லை. ஆனாலும், தற்போதைய சூழலில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக சில அரசியல் விருப்பங்களை பூர்த்தி செய்ய ஆளுநருக்கு மத்திய உளதுறை அமைச்சரிடம் இருந்து சில அழுத்தம் ஏற்பட்டு இருந்தால் எனக்கு ஆச்சர்யம் இல்லை.
தமிழக ஆளுநர் ஆர்என் ரவி மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டுஉள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் என்னிடம் கூறியுள்ளார். இது குறித்து என்னிடம் அவர் ஆலோசிக்கவில்லை. இத்தகைய நடவடிக்கைகள் இந்திய அரசியலமைப்பின் ஆன்மாவை குறைத்து மதிப்பிடுவதோடு, நமது கூட்டாட்சி அமைப்பின் அடித்தளத்தையே தாக்குகின்றன.
மத்திய அரசு கூட்டாட்சிக் கொள்கைகளை மதிக்க வேண்டும். ஜனநாயக மரபுகளையும், மாநிலங்களின் கண்ணியத்தையும் சிதைக்கும் ஒரு தலைபட்ச முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும் – என்று மம்தா கூறியுள்ளார்.
மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என். ரவி நியமனம்! News First Appeared in Dhinasari Tamil