கரூரில் நடைபெற்ற விஜய் மக்கள் இயக்கக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் மற்றும் உயிரிழப்பு குறித்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது கருத்தை வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “விஜய் அந்த இடத்திற்குச் செல்லவில்லை என்றால் இவ்வளவு பெரிய கூட்டம் கூடியிருக்காது. கூட்டம் இல்லையென்றால் நெரிசலும் ஏற்பட்டிருக்காது; அதன் விளைவாக ஒரு உயிர் போயிருக்காது” என்று யதார்த்தமாகப் பேசினார். இந்த விபத்து ஒரு எதிர்பாராத துயரம் என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், இதில் விஜய்யின் வருகையே கூட்டத்திற்குக் காரணம் என்பதையும் மறைமுகமாக அழுத்தமாகப் பதிவு செய்தார்.
இந்த விவகாரத்தை எப்படிச் கையாள்வது என்பது குறித்தும் சீமான் விஜய்க்கு ஒரு ஆலோசனையை வழங்கியுள்ளார். “தெரியாமல் நடந்துவிட்டது என்றும், நடந்த இந்தத் துயரத்திற்கு நானும் ஒரு காரணம் என்றும் கூறி மக்களிடம் ஒரு வருத்தத்தைத் தெரிவித்தால் அந்த விஷயம் அங்கேயே முடிந்துவிடும்” என்று அவர் கூறினார். தவெக தலைவர் விஜய் தனது அரசியல் பயணத்தில் இது போன்ற சவால்களை எப்படிக் கையாளப் போகிறார் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில், சீமானின் இந்த அறிவுரை அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.