ஆந்திரப் பிரதேசத்தில் 13 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்க அம்மாநில அரசு அதிரடி முடிவெடுத்துள்ளது. இது தொடர்பாகச் சட்டப்பேரவையில் இன்று உரையாற்றிய முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு இன்னும் தொண்ணூறு நாட்களுக்குள் இந்தத் தடையானது அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்குக் கொண்டு வரப்படும் என்று உறுதிப்படத் தெரிவித்தார்.
சிறுவர்களின் மனநலம் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை ஆந்திர அரசியலில் மட்டுமன்றி நாடு முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் பதின்மூன்று வயது முதல் பதினாறு வயது வரையிலான சிறுவர்களுக்கும் சமூக வலைதளப் பயன்பாட்டிற்குத் தடை விதிப்பது குறித்துத் தனது அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தடையை அவர்களுக்கும் நீட்டிக்கலாமா என்பது குறித்து விரிவான விவாதங்கள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். அடுத்த மூன்று மாதங்களுக்குள் பதிமூன்று வயதுக்குட்பட்டவர்கள் யாரும் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த முடியாத நிலையைத் தனது அரசு உறுதி செய்யும் என்று சந்திரபாபு நாயுடு சட்டப்பேரவையில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.