பீகாரில் நிதிஷ் குமாரின் முதலமைச்சர் பதவியைப் பறித்து பாஜக அவரை மாநில அரசியலில் இருந்து ஓரங்கட்டியிருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு குற்றம்சாட்டியுள்ளார். பாஜக தனது கூட்டணி கட்சிகளைச் சிதைப்பதில் ‘ரிங் மாஸ்டராக’ செயல்படுவதாகக் குறிப்பிட்ட அவர், மகாராஷ்டிராவில் சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு நேர்ந்த கதிதான், பீகாரில் நிதிஷ் குமாருக்கும் நடந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
கூட்டணிக் கட்சிகளின் தோள்களில் ஏறி வளர்ந்துவிட்டு, இறுதியில் அந்தக் கட்சிகளையே பாஜக காலி செய்துவிடுகிறது என அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.தமிழ்நாட்டிலும் பாஜக இதே ‘பீகார் ஃபார்முலாவை’ கையாளத் திட்டமிட்டுள்ளதாகவும், இதனால் வரும் காலங்களில் அதிமுக என்ற கட்சி இல்லாமல் போக வாய்ப்புள்ளதாகவும் வன்னி அரசு எச்சரித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவிற்கு மிகப்பெரிய ஆபத்து காத்திருப்பதாகவும், பாஜகவின் இந்த சதிவலையை அதிமுக தொண்டர்கள் உணர்ந்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். கூட்டணி என்ற பெயரில் பாஜக நடத்தும் இந்த அரசியல் தந்திரங்களை மற்ற மாநில கட்சிகள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதே அவரது வாதமாக உள்ளது.