தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். திமுக அல்லது அதிமுக ஆகிய திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி அமையலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரு தரப்பிலும் நீடித்து வரும் இழுபறியால் பாமக நிறுவனர் புதிய முடிவை எடுக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மற்றும் டாக்டர் ராமதாஸ் ஆகிய இருவர் மட்டுமே இன்னும் தங்களது தேர்தல் நிலைப்பாட்டை அறிவிக்காமல் உள்ளனர். இந்நிலையில், திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் டாக்டர் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார்.
இந்தக் கூட்டத்தில் கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே.மணி, செயல் தலைவர் ஸ்ரீ காந்தி மற்றும் அருள் எம்.எல்.ஏ உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய டாக்டர் ராமதாஸ், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்துடன் (தவெக) கூட்டணி அமைப்பது குறித்து நிர்வாகிகளின் கருத்தைக் கேட்டறிந்தார். அதற்குப் பதிலளித்த பெரும்பாலான நிர்வாகிகள்:
“தனித்துப் போட்டியிட்டு வாக்குகளைச் சிதறவிடுவதை விட, ஒரு வலுவான கூட்டணியில் இணைந்து போட்டியிடுவதே கட்சியின் பலத்தை நிரூபிக்கச் சரியான வழியாக இருக்கும்” எனத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
வட தமிழகத்தில் பாமகவுக்குச் செல்வாக்குள்ள சுமார் 35 தொகுதிகளைப் பெற்று, தவெக கூட்டணியில் போட்டியிட டாக்டர் ராமதாஸ் யோசித்து வருவதாகத் தெரிகிறது. இதன் மூலம் கட்சியின் சரிந்த செல்வாக்கை மீட்பதுடன், உட்கட்சி ரீதியாகச் சில அதிரடி மாற்றங்களைச் செய்யவும் அவர் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, பாமக தொடர்பாக டாக்டர் ராமதாஸ் தொடர்ந்துள்ள வழக்கு, சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வரும் 9-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கில் அன்புமணி தரப்பும், தேர்தல் ஆணையமும் விளக்கம் அளிக்க உள்ளன.
மேலும் நீதிமன்றத்தின் நிலைப்பாடு மற்றும் அங்கு கிடைக்கப் போகும் விளக்கங்களைப் பொறுத்தே, தனது இறுதி முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க டாக்டர் ராமதாஸ் காத்திருப்பதாகத் தைலாபுரம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.