நல்ல ஆட்சி என்பது சொல்லில் தான் உள்ளது… செயலில் இல்ல… சீமான் அதிரடிப் பேட்டி…!!!
SeithiSolai Tamil March 07, 2026 12:48 AM

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது தமிழகத்தின் தற்போதைய அரசியல் மற்றும் சமூகச் சூழல் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளதாகக் குறிப்பிட்ட அவர் ஒரு வேட்பாளர் தேர்தலுக்காகப் பல கோடி ரூபாயை முதலீடு செய்கிறார் என்றால் அது மக்கள் சேவைக்காக அல்லாமல் லாப நோக்கத்திற்காகவே இருக்கும் என்று சாடினார். வாக்குக்குக் காசு கொடுக்கும் நிலை நிலவுவதால் ஜனநாயகம் என்பது அழிந்து பணநாயகம் வலுவாக வேரூன்றிவிட்டதாக அவர் தெரிவித்தார்.

பணம் இருப்பவர்கள் மட்டுமே அதிகாரத்திற்கு வர முடியும் என்ற நிலை உருவானால் அது முதலாளிகளுக்கான ஆட்சியாகவே இருக்குமே தவிர உழைக்கும் மக்களுக்கான அதிகாரம் அங்கே இருக்காது என்று அவர் எச்சரித்தார்.

மேலும் அரசு விழாக்களில் அறிஞர்களோ அல்லது கல்வியாளர்களோ பங்கேற்பதில்லை என்றும் அதற்குப் பதிலாகத் திரைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் சீமான் குற்றம் சாட்டினார். பள்ளி மற்றும் கல்லூரிகளில் அரசியல் பேசுவதற்குத் தடை விதிக்கும் அதே வேளையில் சினிமா பற்றிப் பேசுவதையும் திரைத்துறையினரை அழைப்பதையும் அரசு ஊக்குவிப்பதாக அவர் வருத்தம் தெரிவித்தார்.

தமிழகத்தைப் போலத் திரைக்கவர்ச்சியில் மூழ்கிய மாநிலம் வேறு எதுவுமில்லை என்று கூறிய அவர் இறைவழிபாட்டை விடத் திரைவழிபாடே இங்கு மேலோங்கி இருப்பதாகவும் சினிமா ஒரு பெரிய மதமாக மாறிவிட்டதாகவும் தனது பேட்டியில் குறிப்பிட்டார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.