காலையிலேயே அதிர்ச்சி... உடனடி அமல்.. வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர் ரூ.60 உயர்வு - வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் ரூ.114.50 உயர்வு!
Dinamaalai March 07, 2026 10:48 AM

இன்று காலையிலேயே அதிர்ச்சியளிக்கும் விதமாக வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர், வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் என்று விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் சிலிண்டர் விலையில் மாற்றங்கள் செய்யப்படுவது வழக்கம். ஆனால், தற்போது நிலவும் போர் பதற்றம் காரணமாகக் காலமுறை மாற்றமின்றி, திடீரென நள்ளிரவில் இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளால் இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இன்று மார்ச் 7ம் தேதி அதிகாலை முதல் இந்தப் புதிய விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களால் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளது. இதனால் உலக நாடுகளுக்குக் கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டுள்ளதே இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் (14.2 கிலோ) பழைய விலை ரூ. 868.50 ஆக இருந்த நிலையில், 1 சிலிண்டருக்கு ரூ.60 உயர்த்தப்பட்டு தற்போது 1 சிலிண்டர் விலை ரூ. 928.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

அதே போன்று வணிக பயன்பாட்டு சிலிண்டர் (19 கிலோ)  நேற்று இரவு வரையில் ரூ. 1,929 என இருந்த நிலையில் தற்போது அதிரடியாக ரூ. 114.50 உயர்த்தப்பட்டு ஒரு சிலிண்டர் ரூ. 2,043.50க்கு விநியோகிக்கப்படுகிறது.

போர் சூழல்: ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் தீவிரமடைந்துள்ளதால், மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வரும் கச்சா எண்ணெய் மற்றும் எல்.பி.ஜி இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தியா தனது தேவையைப் பூர்த்தி செய்ய ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா அனுமதி அளித்துள்ள போதிலும், சர்வதேச சந்தையில் நிலவும் தட்டுப்பாடு விலையேற்றத்திற்கு வழிவகுத்துள்ளது. முன்னதாக, இந்தியாவில் போதுமான அளவு எரிவாயு கையிருப்பு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. இருப்பினும், தற்போதைய அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்கள் விலையை உயர்த்தியுள்ளன.

வீட்டு உபயோக சிலிண்டர் விலை 900 ரூபாயைத் தாண்டியுள்ளதால், சாமானிய மக்களின் குடும்ப பட்ஜெட் கடுமையாகப் பாதிக்கப்படும். வணிக சிலிண்டர் விலை 2,000 ரூபாயைக் கடந்துள்ளதால், உணவகங்களில் உணவுகளின் விலை உயர வாய்ப்புள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.