விஜய்க்கு இளைஞர்களின் ஆதரவு அதிகமாக உள்ளது.. த.வெ.க எதிர்க்கட்சியாக வர வாய்ப்பு உள்ளது – எம்.பி. ஜோதிமணி..
TV9 Tamil News March 07, 2026 10:48 AM

மார்ச் 7, 2026: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கக்கூடிய சூழலில் அரசியல் களம் பரபரப்பாக தொடங்கியுள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் எதிர்க்கட்சியாக அமைவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். தமிழகத்தைப் பொறுத்தவரையில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றி கழகம் என நான்கு முனைப் போட்டி நிலவி வருகிறது. இதில் குறிப்பாக தமிழக வெற்றி கழகத்தை எடுத்துக் கொண்டோம் என்றால், அதன் முதல் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகிறது.

ஆட்சி அதிகாரத்தில் பங்கு வழங்கப்படும் என அக்கட்சியின் தலைவர் விஜய் குறிப்பிட்டிருந்தாலும், தற்போது வரை எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்காத காரணத்தால் வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளது.

மேலும் படிக்க:சுட்டெரிக்கும் சூரியன்.. 100 டிகிரி ஃபாரன்ஹீட் கடந்து பதிவான வெப்பநிலை..

தவெக எதிர்க்கட்சியாக வர வாய்ப்புகள் அதிகம் உள்ளது:

தமிழகத்தில் பிரதானமாக இருக்கும் அதிமுக மற்றும் திமுக கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ஜோதிமணி, விஜய் எதிர்க்கட்சி தலைவராக வர வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

கரூரில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ஜோதிமணி பேசியபோது,
எனக்கு தெரிந்தவரை தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு இளைஞர்களின் ஆதரவு மிக அதிகமாக இருக்கிறது. எனவே வரக்கூடிய 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் எதிர்க்கட்சியாக வருவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளன என தெரிவித்தார்.

அதே சமயத்தில் அதிமுக இந்த தேர்தலில் மூன்றாவது இடத்திற்கு செல்வது மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் அதிமுக சந்திக்கக்கூடிய கடைசி தேர்தலாகவும் இது இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

கூட்டணிக்காக ஒரு சில தியாகங்கள் காங்கிரஸ் செய்துள்ளது:

தமிழக மக்கள் பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கும் எந்தக் கட்சிக்கும் வாக்கு செலுத்தமாட்டார்கள். திமுக கூட்டணியில் உள்ள பல கட்சிகள் அதிகாரப் பகிர்வு குறித்து வலியுறுத்தி வந்தாலும், பாஜகவை வீழ்த்துவது தான் பிரதான இலக்காகும்.

மேலும் படிக்க: பெண்களுக்கான தேர்தல் வாக்குறுதிகளை வெளியிடும் தவெக தலைவர் விஜய் – வெளியான அறிவிப்பு

இந்த கூட்டணி தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும், எதிர்காலத்திற்காகவும், பாஜகவிடமிருந்து தமிழ்நாட்டை காப்பாற்றுவதற்காகவும் அமைக்கப்பட்ட வலுவான கூட்டணி ஆகும்.

இந்த கூட்டணிக்காக காங்கிரஸும் சில தியாகங்கள் செய்துள்ளது. ஒரு பொறுப்பான கட்சியாக சில சமயங்களில் இதுபோன்ற சமரசங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

தற்போது காங்கிரஸ் – திமுக கூட்டணி உறுதி செய்யப்பட்டுவிட்டதால், இந்த தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும், வெற்றி பெறுவது எப்படி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என ஜோதிமணி தெரிவித்தார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.