வளைகுடா நாடுகள் மீதான தாக்குதலுக்கு ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன், மன்னிப்பு கோரியுள்ளார். அத்துடன், அண்டை நாடுகளைத் தாக்க வேண்டாம் என்று தங்களது தற்காலிக தலைமைத்துவக் குழு முடிவு செய்துள்ளது என்று ஈரான் அரசு தொலைக்காட்சியில் உரையாற்றிய பெசெஷ்கியன், தெரிவித்துள்ளார்.
அதாவது, ''அண்டை நாடுகளிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். மற்ற நாடுகளை ஆக்கிரமிக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை. ஈரானுக்கு எதிராக அந்த நாடுகளில் இருந்து தாக்குதல்கள் தொடங்கப்படாவிட்டால், அண்டை நாடுகள் மீது இனி தாக்குதல்கள் இருக்காது அல்லது ஏவுகணை ஏவுதல்கள் இருக்காது என்று தற்காலிக தலைமைத்துவக் குழு முடிவு செய்து அறிவித்துள்ளது.

அதேநேரத்தில், நாங்கள் நிபந்தனையின்றி சரணடைவது என்ற அமெரிக்காவின் கனவுகளை அவர்கள் கல்லறைக்கு எடுத்துச் செல்வார்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
அணு ஆயுத போட்டி காரணமாக அமெரிக்காவும் ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து வருகிறது. இதற்கு பதில் தாக்குதலாக இன்று (மார்ச் 07) அதிகாலை வளைகுடா அரபு நாடுகளை குறிவைத்து ஈரானால் தாக்குதல் நடத்தப்பட்டது. அத்துடன், இன்று காலை பஹ்ரைன், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மீது மீண்டும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

அதாவது, நிபந்தனையற்ற சரணடைதல் இல்லாமல் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டேன் என்று ட்ரம்ப் திட்டவட்டமாக கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, அமெரிக்க அதிபர் ட்ரம்பின் நிர்வாகம் இஸ்ரேலுக்கு 151 மில்லியன் டாலர் புதிய ஆயுத விற்பனையை அங்கீகரித்துள்ளது.
கடந்த கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி முதல், அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது வான்வழி தாக்குதலை தொடங்கின. இதில், ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி உட்பட சுமார் 50 உயர் அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைத் தலங்கள் அமைந்துள்ள வளைகுடா நாடுகள் மீது ஈரான் தொடர்ந்து வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இரு தரப்பு தாக்குதலில் இதுவரை 600 கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கு இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைகள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றன. இந்தச் சூழலில், ஈரான் அதிபரின் பேச்சு தற்போது உலக அரசியல் வட்டத்தில் முக்கியவத்துவம் பெற்றுள்ளது.