'ராஜ்ய சபாவில் தமிழக பிரச்சினைகளை எடுத்து வைத்து, மாநிலத்தின் தேவைகளை நிறைவேற்றித் தருவேன்'; கிறிஸ்டோபர் திலக் உறுதி..!
Seithipunal Tamil March 08, 2026 03:48 AM

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் 04 பேர், அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் 02 பேர் என மொத்தம் 6 பேர் போட்டியின்றி தேர்வாகவுள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மார்ச் 09 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியின்றி  திருச்சியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் திலக்  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் திருச்சி இளைஞர் காங்கிரஸில் தனது அரசியல் பயணத்தை தொடங்கி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராகவுள்ளார்.

இந்நிலையில், மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், இன்று திருச்சிக்கு வந்த அவருக்கு, விமான நிலையத்தில் திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எல்.ரெக்ஸ் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: ஒரு சாதாரண குடும்பப் பின்னணியிலிருந்து வந்து, அடிமட்டத் தொண்டனாக அரசியல் பயணத்தைத் தொடங்கிய எனக்கு இவ்வளவு பெரிய பொறுப்பை காங்கிரஸ் தலைமை வழங்கியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

இது தனக்கு கிடைத்த பெருமை மட்டுமல்ல, தன்னைப்போல உழைக்கும் ஒவ்வொரு தொண்டனுக்கும் கிடைத்த வெற்றியாகக் கருதுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், காங்கிரஸ் மூத்தத் தலைவர்கள் சோனியா, ராகுல், அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை, மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் உள்ளிட்ட அனைவருக்கும் இதன் போது ஆவர் நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், திருச்சி மாநகரில் இளைஞர் காங்கிரஸில் தனது பணியை தொடங்கி இன்று தேசிய அளவில் பல மாநிலங்களில் பணியாற்றியுள்ளேன். ராஜ்ய சபாவில் தமிழக பிரச்சினைகளை எடுத்து வைத்து, மாநிலத்தின் தேவைகளை நிறைவேற்றித் தருவேன் என்று நம்பிக்கை கொடுத்துள்ளார்.

மேலும், திருச்சி மாவட்ட மக்களுடன் கலந்து ஆலோசித்து, இங்கு இருக்கும் பிரச்சினைகள் குறித்து ராஜ்யசபாவில் குரல் கொடுப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஏற்கெனவே இங்கு உள்ள எம்.பிக்களுடன் இணைந்து பணியாற்றி, திருச்சி மாநகரின் முன்னேற்றத்துக்கு, வளர்ச்சிக்கு பாடுபட்டு, திருச்சி மாநகரை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச் செல்வேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடி ஒவ்வொரு முறை தமிழகம் வரும்போதும், அவருக்கு ஒரு வேட்டி சட்டையை கொடுத்து, கும்பகோணம் டிகிரி காபி ஆத்துவது போல ஒரு சீன் கொடுத்து விடுவார்கள். அவருக்கு எழுதிக் கொடுத்த ஸ்க்ரிப்ட்டை பேசிவிட்டு செல்வார். ஒவ்வொரு முறை அவர் வரும்போது தமிழகத்தில் அரசியல் ரீதியாக அவர் என்ன செய்கிறார் என்பதை உற்று நோக்க வேண்டும் என்று கிறிஸ்டோபர் திலக் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.