குட் நியூஸ் சொன்ன அமைச்சர்..! திண்டுக்கல்லில் உதயமாகிறது புதிய 'மினி டைடல் பார்க்'..!
Top Tamil News March 09, 2026 11:48 AM

தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தமது எக்ஸ் பக்கத்தில், ''தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆட்சியில், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி சென்னைக்கு மட்டுமின்றி; மாவட்டங்களுக்கெல்லாம் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் கடந்த 4 ஆண்டுகளில் 17 புதிய மினி டைடல் பார்க் திட்டங்களும், 3 புதிய டைடல் பார்க் திட்டங்களும் தொடங்கப்பட்டுள்ளன.

இதில் 7 மினி டைடல் பார்க் மையங்கள் திறக்கப்பட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி வருகின்றன. மேலும் 6 மையங்கள் கட்டுமானத்தில் உள்ளன; இன்னும் 4 மையங்களில் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன.

அதோடு, மதுரை, திருச்சி மற்றும் ஓசூர் நகரங்களின் 3 புதிய டைடல் பார்க்கை அமைக்கும் பணியை தமிழக அரசு துவங்கியுள்ளது. மாவட்ட இளைஞர்கள் தங்கள் சொந்த மண்ணிலேயே உலகத் தரம் வாய்ந்த வேலைவாய்ப்பைப் பெறும் தமிழ்நாட்டை உருவாக்குவதே நமது இலக்கு.

இந்த வரிசையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனையின்படி திண்டுக்கல் மாவட்ட இளைஞர்கள் பயன்பெறும் வகையில், திண்டுக்கல்–தேனி புறவழிச்சாலையில் உள்ள அனுமந்தராயன் கோட்டையில் 5 ஏக்கர் பரப்பளவில் புதிய “மினி டைடல் பார்க்” ஒன்று அமைக்கப்படும்'' என தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்லை பொறுத்தவரை ஐடி துறையை சார்ந்த இளைஞர்கள் மதுரை, கோயம்புத்தூர், சென்னை, பெங்களூரு போன்ற இடங்களுக்கு சென்று வேலை தேடும் நிலையில் உள்ளனர். இந்த நிலையில், திண்டுக்கல்லில் இத்திட்டம் அமையவுள்ளதால், உள்ளூர் இளைஞர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கிராமப்புற இளைஞர்களும் பயனடைவர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.