அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக பலகட்ட எச்சரிக்கைகளுக்கு பிறகு ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து பிப்ரவரி 28-ம் தேதி தாக்குதலை தொடங்கின. முதல் நாளிலேயே ஈரானின் உச்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து, இரு தரப்பிலிருந்து தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.
ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடையுமாறு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தும், அது ஒருபோதும் நடக்காது என ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அதோடு, எவ்வளவு காலம் வேண்டுமானாலும் போர் புரியும் அளவிற்கு தங்களிடம் வலிமை உள்ளதாகவும் ஈரான் தெரிவித்துவிட்டது.
இதனிடையே, ஈரானின் அடுத்த தலைவராக கமேனியின் மகன் மொஜ்தபா நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியான நிலையில், அதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், மொஜ்தபாவின் நியமனத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தன்னை கேட்டுத் தான் புதிய ஆட்சியாளரை ஈரான் தேர்வு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்த சூழலில், ட்ரம்ப்பின் சொல்லை உதாசீனப்படுத்திவிட்டு, புதிய உச்ச தலைவராகவும், மத குருவாகவும் அலி கமேனியின் 2-வது மகன் மொஜ்தபாவை நியமித்துள்ளது ஈரான்.
புதிய உச்ச தலைவரை தேர்வு செய்வதற்காக 88 மதகுருமார்களைக் கொண்ட மதகுருமார் சபை ஆலோசனை நடத்தியது. அதைத் தொடர்ந்து, "ஒரு தீர்க்கமான வாக்கெடுப்பின் மூலம், நிபுணர்கள் சபை, அயதுல்லா செய்யத் மொஜ்தபா ஹொசைனி கமேனியை, ஈரான் இஸ்லாமியக் குடியரசின் புனித அமைப்பின் மூன்றாவது தலைவராக நியமித்தது," என்று டெஹ்ரான் நேரத்தின்படி, நள்ளிரவுக்குப் பிறகு வெளியிடப்பட்ட அறிக்கையில் அந்த சபை தெரிவித்துள்ளது.
The representatives of the Assembly of Experts appointed and introduced Ayatollah Sayyid Mojtaba Hosseini Khamenei (may God protect him) as the Third Leader of the Sacred Islamic Republic of Iran under Article 108 of the Constitution. pic.twitter.com/gZgvEI7Ds2
— Khamenei Media (@Khamenei_m) March 8, 2026
இந்தப் பதவி, இஸ்லாமியக் குடியரசின் அனைத்து அரசு விஷயங்களிலும் மொஜ்தபாவுக்கு இறுதி அதிகாரத்தை அளிக்கிறது.
கமேனியின் 2-வது மகனான மொஜ்தபா 1969-ம் ஆண்டு மஷாத் நகரில் பிறந்தவர். இவரது தந்தை அலி கமேனி உச்ச தலைவராக இருந்த போதிலும், ஆட்சியில் மொஜ்தபா எந்த பெரிய பதவியையும் வகிக்கவில்லை. எனினும், பின்னணியில் இவரது செல்வாக்கு இருந்துவந்துள்ளது.
ஈராக் உடனான போரின்போது, மொஜ்தபா ஈரான் ஆயுதப் படையுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால், ஈரானின் பாதுகாப்புப் படைகளுக்குள் செல்வாக்கும், தனது தந்தையின் கீழ் பரந்த வணிக வலையமைப்புகளும் கொண்ட ஒரு நடுத்தர பதவியிலும், மதகுருவாகவும் இருந்துள்ளார் மொஜ்தபா.
இதனிடையே, கடந்த 2019-ம் ஆண்டு, அமெரிக்க கருவூலத் துறை மொஜ்தபா மீது தடைகளை விதித்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஈரான் உச்ச தலைவராக மொஜ்தபா நியமிக்கப்பட்டுள்ள நிலையில், ட்ரம்ப் இப்போது என்ன செய்வார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏற்கனவே ஈரான் தலைவர் நியமனத்தில் தனது தலையீடு இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்திருந்தார்.
ஆனால், அவரது பேச்சை சற்றும் பொருட்படுத்தாமல், மொஜ்தபா நியமிக்கப்பட்டுள்ளதால், ட்ரம்ப் நிச்சயம் கோபமடைவார். ஏற்கனவே ஈரானை முழுவதுமாக அழிப்பது குறித்து அவர் யோசித்து வருவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், இப்போது அதை ட்ரம்ப் நிகழ்த்துவாரா என்ற அச்சம் எழுந்துள்ளது.
என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.