Rashmika Mandanna: `இப்படி உணர்ச்சிவசப்பட்டு ரொம்பநாள் ஆகுது' - ரஷ்மிகாவின் நெகிழ்ச்சிப் பதிவு!
Vikatan March 09, 2026 05:48 PM

சமீபத்தில் திரையுலக நட்சத்திரங்கள் திரும்பிப் பார்த்த நிகழ்வுகளில் ஒன்று நடிகர்கள் ரஷ்மிகா - விஜய்தேவரகொண்டா திருமணம். பிப்ரவரி 26 அன்று நடந்து முடிந்த திருமணத்துக்குப் பிறகு நடிகை ரஷ்மிகா தன் சமூக ஊடகப் பக்கத்தில், ``வணக்கம் என் அன்புகளே, இப்போது எனது கணவரை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்! திரு. விஜய் தேவரகொண்டா!! உண்மையான காதல் எப்படி இருக்கும் என்பதை எனக்குக் கற்றுக்கொடுத்த மனிதர்.

அமைதியாக இருப்பது எப்படி என்பதை எனக்குக் காட்டிய மனிதர்! பெரிய கனவுகளைக் காண்பது முற்றிலும் சரியானது என்று ஒவ்வொரு நாளும் என்னிடம் சொல்லி, நான் நினைப்பதைக் காட்டிலும் என்னால் இன்னும் அதிகமாகச் சாதிக்க முடியும் என்று தொடர்ந்து எனக்கு நம்பிக்கை ஊட்டிய மனிதர்!. யாரும் பார்க்கவில்லை என்றெண்ணி ஆடுவதிலிருந்து என்னை ஒருபோதும் தடுக்காத மனிதர்... நண்பர்களுடன் பயணம் செய்வதுதான் உலகிலேயே சிறந்த விஷயம் என்பதைக் காட்டியவர்.

விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா திருமண க்ளிக்ஸ்!

என்னை நம்புங்கள், இந்த மனிதரைப் பற்றி என்னால் ஒரு புத்தகமே எழுத முடியும்! நான் எப்போதும் எப்படிப்பட்ட பெண்ணாக இருக்க வேண்டும் என்று கனவு கண்டேனோ, அப்படிப்பட்ட பெண்ணாக இன்று மாறியிருக்கிறேன். ஏனென்றால், நீங்கள் தான் என்னை இப்படி உருவாக்கியிருக்கிறீர்கள்! நான் உண்மையிலேயே ஆசீர்வதிக்கப்பட்டவள்! விஜு, உன் மீதான என் உணர்வுகளை விவரிக்க எனக்கு எப்போதும் வார்த்தைகள் போதாது!! இதை நான் உன்னிடம் எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பேன்!

திடீரென்று இப்போது என்னுடைய அனைத்து சாதனைகள், போராட்டங்கள், மகிழ்ச்சி, சோகம், இன்பம், வாழ்க்கை என அனைத்தும் ஒரு முழுமையான அர்த்தத்தைப் பெற்றுள்ளன. ஏனென்றால், இவை அனைத்தையும் நேரில் காண்பதற்கும், இதில் மிகப்பெரிய அங்கமாக இருப்பதற்கும் நீ என்னுடன் இருக்கிறாய்! உனது மனைவி என்று அழைக்கப்படுவதற்கு நான் பெருமைப்படுகிறேன்! இது இப்போது முழுமையான கொண்டாட்டத்திற்கான நேரம்! நாம் இருவரும் இணைந்து சிறந்த வாழ்க்கையை வாழ்வோம்!" எனப் பதிவிட்டிருந்தார்.

அதைத் தொடர்ந்து, அவர்களின் திருமண புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலானது. இந்த நிலையில், ஒரு பயனர் எக்ஸ் பக்கத்தில் ரஷ்மிகா - தேவரகொண்டா திருமணம் குறித்து, ``ஒரு அவநம்பிக்கை நிறைந்த யுகத்தில், காதலும் நம்பிக்கையும் கலந்த நேர்மறை எண்ணம்." எனக் குறிப்பிட்டு நீண்ட பதிவு ஒன்றை எழுதியிருந்தார். இந்தப் பதிவுக்கு நடிகை ரஷ்மிகா பதிலளித்திருந்தார்.

விஜய் தேவரகொண்டா-ரேஷ்மிகா

அதில், ``நீண்ட காலமாக என்னைப் பற்றி எழுதப்பட்ட ஒன்றைப் படித்து இவ்வளவு உணர்ச்சிவசப்பட்டதில்லை.. நான் சொல்ல விரும்புவது நிறைய இருக்கிறது, ஆனால் என்னால் சொல்ல முடிவது மிகக் குறைவானவையே. நான் என் சொந்த அறையைக் கண்டுபிடித்து வருகிறேன், அது ஒரு பயணம், அதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.. அதை அங்கீகரித்ததற்கு நன்றி.. அன்பைப் பற்றி நான் சொல்லக்கூடியது எல்லாம் - உங்களை விடுவிக்கும் ஒரு அன்பைக் கண்டுபிடியுங்கள்." என ரஷ்மிகா குறிப்பிட்டிருந்தார்.

ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டா ரிசப்ஷன் க்ளிக்ஸ்! |Photo Album
© Copyright @2026 LIDEA. All Rights Reserved.