TN Election Rewind: ஜெயலலிதாவையே தோற்கடித்த பர்கூர்.. அதிமுகவை அலறவிட்ட 1996 சட்டமன்ற தேர்தல்!
சுகுமாறன் March 09, 2026 08:14 PM

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் இன்னும் இரு மாதங்களுக்குள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்தியில் ஆட்சியமைப்பது யார்? என்பதை பல முறை தீர்மானித்த தமிழ்நாடு, தனது சட்டமன்ற தேர்தல்களில் பல திருப்பங்களையும், மறக்க முடியாத நிகழ்வுகளையும் கொண்டுள்ளது.

அதிமுக-வை அலறவிட்ட பர்கூர்:

அந்த வகையில், எம்ஜிஆர் மறைவிற்கு பிறகு அதிமுக-வை முழுவீச்சில் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி வகித்தவருமான ஜெயலலிதா  தோற்ற சம்பவத்தை கீழே காணலாம். 1991ம் ஆண்டு முதன்முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பெடுத்த ஜெயலலிதா மீதும், அவரது ஆட்சியின் மீதும் மிகப்பெரிய அதிருப்தி மக்கள் மத்தியில் இருந்தது.

அப்போதுதான் ரஜினிகாந்த் ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது என்று பேட்டி அளித்தார். அந்தளவு ஜெயலலிதா மீது கடும் அதிருப்தியில் மக்கள் இருந்த நிலையில், ஜெயலலிதா கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் தொகுதியில் போட்டியிட்டார். 

ஜெயலலிதா தோல்வி:

அந்த தேர்தலின் முடிவு அதிமுக-வையே ஸ்தம்பிக்க வைத்தது. அந்த தேர்தலில் ஜெயலலிதாவே தோல்வி அடைந்தார். அவர் அந்த தேர்தலில் 50 ஆயிரத்து 782 வாக்குகள் பெற்றிருக்க, அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சுகவனம் 59 ஆயிரத்து 148 வாக்குகள் பெற்று, ஜெயலலிதாவை காட்டிலும் 9 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.

இந்த தோல்வி அதிமுக தொண்டர்களுக்கும், ஜெயலலிதாவிற்குமே பேரதிர்ச்சியை உண்டாக்கியது. அந்த தேர்தலில் 168 தொகுதிகளில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட அதிமுக 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. திமுக 173 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது.

மன உளைச்சலில் அதிமுக:

இந்த தேர்தல் தோல்வி அதிமுக தொண்டர்கள் மத்தியில் மிகுந்த மன உளைச்சலை உண்டாக்கினாலும், அதன்பின்பும் கட்சியை தனது கட்டுப்பாட்டிலே ஜெயலலிதா வைத்திருந்தார். அடுத்து நடந்த 2001 சட்டமன்ற தேர்தலில் 132 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியைமத்தது.  திமுக 31 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று தோல்வி அடைந்தது. 2001 சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா போட்டியிடாமலே முதலமைச்சர் ஆன பின்பு, வழக்கில் சிக்கி சிறைக்குச் சென்றார். அப்போது, அவருக்கு பதிலாக அடுத்த 5 மாதங்கள் முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவி வகித்தார்.  பின்னர், சிறையில் இருந்து வெளியே வந்த ஜெயலலிதா 2002ம் ஆண்டு ஆண்டிப்பட்டி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மீண்டும் முதலமைச்சரானார்.

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி வகித்து மக்கள் மத்தியில் செல்வாக்கு மிகுந்த தலைவராக திகழ்ந்த ஜெயலலிதா தோல்வி அடைந்தது தமிழக வரலாற்றிலும், அதிமுக வரலாற்றிலும் மறக்க முடியாத ஒரு நிகழ்வாகவே உள்ளது. அதன்பின்பு, ஜெயலலிதா தான் போட்டியிட்ட எந்த தேர்தலில் தோல்வியே அடையவில்லை.
அதன்பின்பு, ஆண்டிப்பட்டி, ஸ்ரீரங்கம், ஆர்.கே.நகர் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஜெயலலிதா கடைசியாக ஆர்கே நகர் தொகுதியில் வெற்றி பெற்று முதலமைச்சராக பொறுப்பேற்றார். பின்னர், உடல்நலக்குறைவால் 2016ம் ஆண்டு உயிரிழந்தார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.