த.வெ.க. தலைவர் விஜய் நேரில் ஆஜராக சி.பி.ஐ. மீண்டும் சம்மன்..!
Top Tamil News March 10, 2026 11:48 AM

கரூரில் கடந்த் ஆண்டு செப்டம்பர் 27 அன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் கடந்த 12-ம் தேதி ஆஜரானார். அப்போது அவரிடம் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் 19-ம் தேதி ஆஜாரக சம்மன் அனுப்பியதைத் தொடர்ந்து அன்றைய தினம் மீண்டும் அவர் ஆஜரானார். அன்று காலை 10.30 மணிக்கு விசாரணை தொடங்கி 6 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

அப்போதே விஜய்யின் பெயர் குற்றப்பத்திரிகையில் சேர்ப்பு, விஜய் கைதாக வாய்ப்பு என்றெல்லாம் தகவல்கள் வெளியாகின. ஆனால் ஊகங்கள் பொய்க்க அவர் விசாரணை முடிந்து சென்னை திரும்பினார். அதேவேளையில், 2-வது முறையாக விஜய் ஆஜரானபோது சில கேள்விகளுக்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க அவரது தரப்பில் கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டதால், அவர் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில், விஜய் இன்று (மார்ச் 10) டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து சி.பி.ஐ. அலுவலக வட்டாரங்களில், ‘கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பான விசாரணையில் சில விவரங்கள் கிடைத்துள்ளன. அது தொடர்பாக விஜய்யிடம் மேலும் விசாரித்து, தெளிவு பெற வேண்டியுள்ளது. இதன் நிமித்தமாகவே அவர் மார்ச் 10-ல் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது’ எனக் கூறப்படுகிறது.

இருப்பினும், இதன் பின்னணியில் அரசியல் அழுத்தங்கள் இருக்கலாமோ என்ற சந்தேகங்களை சிலர் எழுப்பி வருகின்றனர். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் த.வெ.க. முதன்முறையாகக் களம் காண திட்டமிட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்படாவிட்டாலும் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில் த.வெ.க. தனித்து நிற்கிறது. த.வெ.க.வை தங்கள் கூட்டணிக்கு வருமாறு தமிழக பா.ஜ.க. தரப்பில் காய் நகர்த்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் விஜய்க்கு சி.பி.ஐ. அலுவலகம் சம்மன் அனுப்பியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.