Gas Cylinder: கேஸ் சிலிண்டர் விநியோகம் நிறுத்தம் - இந்தியன் ஆயில் அறிவிப்பு.. மத்திய, மாநில அரசுகள் தீவிரம்
குலசேகரன் முனிரத்தினம் March 10, 2026 01:14 PM

LPG Gas Cylinder Indane: அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையே போர் சூழல் நீடிப்பதால் எரிபொருள்
தேவைக்கான மாற்று ஏற்பாடுகளை செய்துகொள்ள இந்தியன் ஆயில் நிறுவனம் வலியுறுத்தல்.

கேஸ் சிலிண்டர் விநியோகம் நிறுத்தம் - இந்தியன் ஆயில் நிறுவனம்:

அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையே போர் சூழல் நீடிப்பதால், தொழிற்சாலை மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் அறிவித்துள்ளது. தங்கள் தேவைக்கான மாற்று ஏற்பாடுகளை செய்துகொள்ளவும் வலியுறுத்தியுள்ளது.

கேஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு - மத்திய அரசு அதிரடி

மேற்காசிய நாடுகளில் நிலவும் போர் சூழல் காரணமாக, அமெரிக்கா மற்றும் அரபு நாடுகளில் இருந்து இந்தியாவிற்கான கச்சா எண்ணெய் வருகை குறைந்துள்ளது. இதன் விளைவாக ஒரு சிலிண்டரை வாங்கிய பிறகு மற்றொரு சிலிண்டரை முன்பதிவு செய்வதற்கான கால இடைவெளியை மத்திய அரசு 25 நாட்களாக நீட்டித்து அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதுபோக தட்டுப்பாட்டை குறைக்க வீட்டு உபயோக சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படியே, வணிக மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, வணிகப் பயன்பாட்டிற்கான எரிவாயு வழங்குதில் மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிப்பதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு உத்தரவு..

இதனிடையே, தமிழ்நாட்டில் சிலிண்டர்கள் கையிருப்பு எவ்வளவு? தேவை எவ்வளவு? உடனடியாக தெரிவிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அமெரிக்கா-ஈரான் இடையேயான போரால் இந்தியாவில் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தலைமைச் செயலாளர் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாம்.

முடங்கும் ஓட்டல்கள்:

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், ஓட்டல் சேவைகள் பெருமளவில் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பல முன்னணி ஓட்டல்களும் இன்று ஒரு நாளைக்கு மட்டுமே கையிருப்பு உள்ளதால், உடனடியாக விநியோகம் சீரடையாவிட்டால், இன்றுடன் கடையை மூட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம் என அச்சம் தெரிவித்துள்ளனர். பல டீலர்களும் நேற்று முதலே உணவகங்களுக்கான விநியோகத்தை நிறுத்திவிட்டதாக ஓட்டல் உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னை ஓட்டல்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. முன்னதாக கர்நாடகாவில் ஏற்கனவே இன்று ஓட்டல்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.