எரிபொருள் தட்டுப்பாட்டின் ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு தாய்லாந்து அரசு உத்தரவு..!
Seithipunal Tamil March 11, 2026 05:48 AM

இஸ்ரேல் - ஈரான் தாக்குதல் காரணமாக மத்தியக் கிழக்கில் போர்ச் சூழலால் உலக நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் சூழலில் உருவாகியுள்ளது. 

இந்த நிலையில், தாய்லாந்தில் அலுவலக ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மின்சாரத்தைச் சேமிக்க ஏசி வெப்பநிலையை 26°C ஆக வைக்கவும், லிஃப்டிற்கு பதிலாக படிக்கட்டுகளைப் பயன்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேபோன்று இன்றிலிருந்து அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய வேண்டும் என்று பிரதமர் உத்தரவிட்டுள்ளார் என்று செய்தித் தொடர்பாளர் லலிதா பெரிஸ்விவதனா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அரசு அலுவலகக் கட்டிடங்களில் தேவைப்படாத நேரங்களில் விளக்குகள் மற்றும் மின் சாதனங்களை அணைக்கவும் அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்களிடம் ஒத்துழைப்பு கோருவதுடன், கார் பூலிங் (ஒரே வாகனத்தில் பலரும் பயணம் செய்தல்) போன்ற எரிசக்தி சேமிப்பு நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.

இன்னும் நிலைமை மோசமடைந்தால் கடைகள், திரையரங்குகள் மற்றும் வணிக நிறுவனங்களில் உள்ள விளம்பரப் பலகைகளின் வெளிச்சத்தைக் குறைப்பது மற்றும் இரவு 10 மணிக்குப் பிறகு எரிபொருள் நிலையங்களை (பெட்ரோல் பங்க்) மூடுவது போன்ற கட்டாய நடவடிக்கைகளை அரசு பரிசீலிக்கலாம் என்று தாய்லாந்து அரசு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அத்துடன், தற்போது தாய்லாந்திடம் 95 நாட்களுக்கு தேவையான எரிசக்தி இருப்பு இருப்பதாகவும், இருப்பினும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளிடம் இருந்து கூடுதல் திரவ இயற்கை எரிவாயுவை (LNG) பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அந்நாட்டு எரிசக்தி துறை அமைச்சர் அட்டாபோல் ரெக்பிபூன் தெரிவித்துள்ளார்.

மேலும், தாய்லாந்தின் எரிசக்தி தேவையில் கிட்டத்தட்ட 68% இயற்கை எரிவாயு மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. அந்நாட்டின் எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின்படி, அதன் திரவ இயற்கை எரிவாயுவில் பாதிக்கும் மேலானது உள்நாட்டு உற்பத்தியில் இருந்தும், 35% இறக்குமதிகள் மூலமாகவும் கிடைக்கிறது; இதில் 13% அண்டை நாடான மியான்மரில் இருந்து பெறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.