ஈரோடு மாவட்டத்தில் நிலவும் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு, வெறும் ஹோட்டல் உரிமையாளர்களை மட்டுமல்லாது, அங்கு பணிபுரியும் சுமார் 4,000 தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது. போர் சூழலால் கேஸ் விநியோகம் முடங்கியுள்ள நிலையில், ஈரோடு மாநகரப் பகுதியில் உள்ள 400-க்கும் மேற்பட்ட ஹோட்டல்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. “சிலிண்டர் தட்டுப்பாட்டால் உணவகங்களை நடத்த முடியாமல் போனால், இந்த 4,000 ஊழியர்களின் குடும்பங்கள் நேரடியாகப் பாதிக்கப்படும்” என ஈரோடு மாவட்ட உணவக உரிமையாளர் சங்கத் தலைவர் தங்கவேலு மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
நகரப் பகுதிகளில் விறகடுப்புகளைப் பயன்படுத்தப் போதிய இடவசதி இல்லாததால், கேஸ் தட்டுப்பாட்டைச் சமாளிக்க முடியாமல் ஹோட்டல் நிர்வாகங்கள் திணறி வருகின்றன. முக்கிய ஆர்டர்களைத் தவிர மற்ற டீ, காபி போன்ற பயன்பாடுகளைக் குறைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதால், அங்குள்ள ஊழியர்களுக்கு வேலை இழப்பு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது. “அரசு உடனடியாகத் தலையிட்டு வணிக சிலிண்டர் விநியோகத்தைச் சீர் செய்யாவிட்டால், 4,000 குடும்பங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் சிதைந்துவிடும்” என உரிமையாளர்கள் அரசுக்கு உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளனர்.