நிதி நிறுவனங்கள் நடத்தி அறுபதுக்கும் மேற்பட்டோரிடம் கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டிக்கொண்டு குடும்பம் ஒன்று மோசடி செய்து ஓடிய சம்பவம் கன்னியாகுமரியில் அரங்கேறியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் தமிழக - கேரள எல்லையான களியக்காவிளை எல்லை சோதனைச்சாவடி அருகே கோகுல், கெளதம் என்ற பெயர்களில், ஜெயசேகர் மற்றும் அவரது மனைவி கலா ஆகியோர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, நிதி நிறுவனங்கள் நடத்தி வருகின்றனர். இந்த நிதி நிறுவனங்களில் கூலி வேலை பார்ப்பவர்கள் முதல் தொழிலதிபர்கள் வரை ஏராளமானோர் சேமிப்பு வைப்பு தொகை மற்றும் நகை அடகு வைத்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு குறித்த நிதி நிறுவனங்களைப் பூட்டி விட்டு, குடும்பத்தோடு ஜெயசேகர் மற்றும் அவரது மனைவி கலா தலைமறைவாகியுள்ளனர். இதனால் தங்களது சேமிப்புப் பணத்தை இழந்த அறுபதுக்கும் மேற்பட்டோர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில், ஜெயசேகரின் வீடு தமிழ்நாட்டிலும், நிதி நிறுவனங்கள் கேரள பகுதியிலும் இருப்பதால், கேரள மாநிலம் பாறசாலை காவல் நிலையம் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த மாதம் 12-ஆம் தேதி பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீருடன் புகார் அளித்துள்ளனர். ஆனால், இதுவரை இரு மாநில போலீசாரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மோசடி செய்துவிட்டு தப்பியோடிய நிதி நிறுவன உரிமையாளர் வீட்டில் சமையல் வேலை பார்த்த மூதாட்டி மற்றும் அந்தப் பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில், இலை எடுக்கும் கூலி தொழிலாளிகள் முதல் பெரிய தொழிலதிபர்கள் வரை பலரும் பணம் சேமித்து வைத்துள்ளனர்.
இந்த சேமிப்பு நிதி ஒரு லட்சம் முதல் ஐம்பது லட்சம் வரை சுமார் பத்து கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் எனக் தெரிவிக்கப்படுகிறது. ஒட்டுமொத்த பணத்தையும் சுருட்டிக்கொண்டு அவர் குடும்பத்தோடு தலைமறைவாகி விட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தலைமறைவாக உள்ள நிதி நிறுவன உரிமையாளரை கண்டுபிடித்து நிதியை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் கண்ணீர் மல்க அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.