IPL 2026: சாதனைகளை படைக்கும் நோக்கில் சஞ்சு சாம்சன்.. ஐபிஎல் 2026 சாதகமாக அமையுமா?
TV9 Tamil News March 21, 2026 10:48 PM

ஐபிஎல் 2026 சீசன் (IPL 2026) வருகின்ற 2026 மார்ச் 28ம் தேதி முதல் தொடங்கினாலும், வருகின்ற 2026 மார்ச் 30ம் தேதியன்று ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது பயணத்தைத் தொடங்குகிறது. ​​சிஎஸ்கே அணியின் புதிதாக இணைந்த சஞ்சு சாம்சன் ரன் வேட்டையை காண சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 2026 டி20 உலகக் கோப்பையில் சஞ்சு சாம்சன் ஒரு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்ல முக்கிய காரணமாக அமைந்தார். இதன் காரணமாக, சஞ்சு சாம்சன் (Sanju Samson) இப்படியான ஆட்டத்திறனைத் தொடர்வார் என்று ரசிகர்கள் நம்புகிறார்கள். அதேநேரத்தில் சஞ்சு சாம்சன் தொடக்க வீரராக களமிறங்குவாரா அல்லது மிடில் ஆர்டரில் களமிறங்குவாரா என்பதைப் பார்ப்பதும் சுவாரஸ்யமாக இருக்கும்.

சஞ்சு சாம்சன் தற்போது சிஎஸ்கே அணி பயிற்சி முகாமில் கடினமாகப் பயிற்சி செய்து வருகிறார். அதேநேரத்தில், தல தோனியுடன் சஞ்சு சாம்சன் நேரத்தைச் செலவிடுவதைக் காண முடிந்தது. சஞ்சு சாம்சன் தனது உலகக் கோப்பை ஆட்டத்திறனை ஐபிஎல்-லிலும் தொடர்ந்தால், அவர் பல சாதனைகளைப் படைக்கக்கூடும். அதனை பற்றிய விவரங்களை இங்கு தெரிந்து கொள்வோம்.

ALSO READ: சாம்சனுடன் ஒன்றாக அமர்ந்து பேசிய தோனி.. சமூக வலைதளங்களில் கொண்டாடி தீர்க்கும் ரசிகர்கள்!

சஞ்சு சாம்சன் மாபெரும் சாதனை படைக்க வாய்ப்பு:

ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் சஞ்சு சாம்சன் 9வது இடத்தில் உள்ளார். சஞ்சு சாம்சன் தனது ஐபிஎல் கிரிக்கெட் வாழ்க்கையில் இதுவரை 177 போட்டிகளில் 219 சிக்ஸர்களை அடித்துள்ளார். வரவிருக்கும் இந்த சீசனில் சாம்சன் 17 சிக்ஸர்களை அடித்தால், பொல்லார்ட், ரஸ்ஸல், வார்னர் மற்றும் டி வில்லியர்ஸ் ஆகியோரை முந்தி, இந்த லீக்கில் ஐந்தாவது அதிக சிக்ஸர் அடித்த வீரர் என்ற பெருமையைப் பெறுவார். கிறிஸ் கெய்ல் 357 சிக்ஸர்களுடன் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். ரோஹித் சர்மா 302 சிக்ஸர்களுடன் இரண்டாம் இடத்திலும், கோலி 291 சிக்ஸர்களுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

அதேநேரத்தில், ஏபி டிவில்லியர்ஸ் 251 சிக்ஸர்களுடன் 4வது இடத்திலும், டேவிட் வார்னர் 236 சிக்ஸர்களுடன் 5வது இடத்திலும், ஆண்ட்ரே ரஸ்ஸல் 223 சிக்ஸர்களுடன் 6வது இடத்திலும், கீரன் பொல்லார்ட் 223 சிக்ஸர்களுடன் 7வது இடத்திலும் உள்ளனர்.

ALSO READ: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து விலகியது ஏன்..? சஞ்சு சாம்சன் விளக்கம்!

ஐபிஎல்லில் 5000 ரன்கள்:

ஐபிஎல் வரலாற்றில் 5,000 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை எடுத்த ஒரே விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் மகேந்திர சிங் தோனி மட்டுமே. இந்தச் சாதனையை எட்டுவதற்கு சஞ்சு சாம்சனுக்கு இன்னும் 296 ரன்கள் மட்டுமே தேவையாக உள்ளது. கடந்த 2013 முதல் 2025 வரை 177 போட்டிகளில் 4704 ரன்கள் எடுத்து சஞ்சு சாம்சன், தனது ஆட்டத்திறனைத் தொடர்ந்தால் இந்த ஐபிஎல் 2026 சீசனில் இந்த மைல்கல்லை படைக்கலாம்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.