வணிக காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் மூலப்பொருட்களின் விலையேற்றம் காரணமாக கோவையில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கிரில்கேட், பவுண்டரி, பம்ப் செட் மற்றும் வெட் கிரைண்டர் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மந்தநிலை ஏற்பட்டுள்ளது.மகாராஷ்டிரா போன்ற வட மாநிலங்களில் காஸ் தட்டுப்பாட்டால் இரும்பு தகடு, பைப் உள்ளிட்ட மூலப்பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.
இதனால் கோவைக்கு வரவேண்டிய விநியோகம் பாதிக்கப்பட்டு, கடந்த 10 நாட்களில் கிரில்கேட் மற்றும் ஜன்னல் உற்பத்தி 25 சதவீதம் வரை குறைந்துள்ளது.
மேலும், இரும்பு மூலப்பொருட்களின் விலை டன்னுக்கு ரூ.5,000 வரை உயரக்கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது.
இதேபோல், காஸ் தட்டுப்பாட்டை முன்னிட்டு பிளாஸ்டிக் பொருட்களின் விலை 60 முதல் 65 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
இது வெட் கிரைண்டர் மற்றும் பைப் தயாரிப்புத் துறையினரைப் பெரிதும் பாதித்துள்ளது. ஏற்கனவே காப்பர், சில்வர் மற்றும் இரும்பு விலை உயர்வால் தவித்து வரும் சிறு தொழில் முனைவோருக்கு, தற்போதைய பிளாஸ்டிக் விலை உயர்வும் கூடுதல் சுமையாக மாறியுள்ளது.