தமிழகத்தில் வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு அதிமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீடுப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. தற்போதைய நிலவரப்படி பாரதிய ஜனதா கட்சிக்கு இருபத்தி ஏழு தொகுதிகளும் பாமகவுக்கு பதினெட்டு தொகுதிகளும் அமமுக கட்சிக்கு பதினோரு தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
கடந்த 2021ம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடுகையில் பாஜகவுக்கு கூடுதலாக ஏழு இடங்கள் கிடைத்துள்ளன. அதே சமயம் பாமகவுக்கு கடந்த முறையை விட ஐந்து இடங்கள் குறைவாகவே ஒதுக்கப்பட்டுள்ளன. பாமகவில் டாக்டர் ராமதாஸ் மற்றும் டாக்டர் அன்புமணி என இரு பிரிவுகள் ஏற்பட்டதே இந்தத் தொகுதி எண்ணிக்கை குறைவிற்குக் காரணம் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணி எழுபத்தியைந்து இடங்களில் வெற்றி பெற்றிருந்த நிலையில் இந்த முறை கூடுதல் பலத்துடன் களம் இறங்கத் திட்டமிட்டுள்ளது. கூட்டணியில் உள்ள மற்ற சிறிய கட்சிகளுக்கான இட ஒதுக்கீடும் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு மூன்று இடங்களும் புதிய நீதிக்கட்சி மற்றும் இந்திய ஜனநாயகக் கட்சிக்கு தலா 2 இடங்களும் ஒதுக்கப்படலாம் எனத் தெரிகிறது.
மேலும் புரட்சி பாரதம் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதி வழங்கப்பட வாய்ப்புள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தங்கள் இன்று இரவுக்குள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டணிக் கட்சிகளுக்குத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டது போக மீதமுள்ள நூற்றறுபத்தியெட்டு தொகுதிகளில் அதிமுக நேரடியாகப் போட்டியிட முடிவெடுத்துள்ளது.
கடந்த தேர்தலில் ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்ற சிறிய கட்சிகளும் இந்த முறை அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.