Reuters
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போரின் ஒரு பகுதியாக, வளைகுடா நாடுகள் முழுவதும் இரான் தொடர்ந்து ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இதுவரை, கத்தார் மற்றும் பிற வளைகுடா நாடுகள் இரானால் பலமுறை இலக்கு வைக்கப்பட்ட பின்னரும், அதற்குப் பதிலடி கொடுக்க வேண்டாம் என்றே வளைகுடா நாடுகள் முடிவு செய்துள்ளன.
அந்த நாடுகள் ஏன் தாக்குதல்களைத் தவிர்க்கின்றன மேலும் எது அவர்களை நடவடிக்கை எடுக்கத் தூண்டக்கூடும்?
அதிக பாதிப்பு, குறைந்த பலன்பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் இரானுக்கு எதிராகத் தங்களது கூட்டு ராணுவ நடவடிக்கையை தொடங்கியபோது, இரான் உடனடியாக இஸ்ரேலுக்கு எதிராக மட்டுமல்லாமல், அமெரிக்காவுடன் கூட்டணி வைத்துள்ள வளைகுடா நாடுகளுக்கு எதிராகவும் தாக்குதல்களைத் தொடுத்தது.
பஹ்ரைன், குவைத், செளதி அரேபியா, கத்தார், ஓமன் மற்றும் குறிப்பாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய அனைத்து நாடுகளும் இலக்கு வைக்கப்பட்டுள்ளன.
இப்பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைத் தாக்குவதுடன், விமான நிலையங்கள், ஹோட்டல்கள், குடியிருப்புப் பகுதிகள் மற்றும் குறிப்பாக எரிசக்தி தளங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகளையும் இரான் தாக்கியுள்ளதாக வளைகுடா அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும், இதுவரை வளைகுடா நாடுகள் இரானுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தவும், இந்தப் போரில் நேரடியாக ஈடுபடவும் விரும்பவில்லை.
Getty Images
"அவர்களின் பார்வையில், இது அவர்களுடைய போர் அல்ல. பதிலடி கொடுப்பது அவர்களைப் பாதிப்புக்குள்ளாகக் கூடிய பார்வையாளர்களிலிருந்து பெரிய இலக்குகளாக மாற்றும் அபாயம் உள்ளது. ஏனெனில், அவர்களுக்குப் பெறுவதை விட இழப்பதற்குத்தான் அதிகம் உள்ளது" என்று கூறுகிறார் சர்வதேச கொள்கை மையத்தின் மூத்த ஆய்வாளர் சினா டூசி.
"பலவீனமான நிலை, உத்தி கணக்கீடு மற்றும் குறைந்தபட்ச பலன் ஆகியவற்றின் கலவையே" இந்த முடிவுக்கான காரணம் என்று டூசி கூறுகிறார்.
வளைகுடா நாடுகளின் பொருளாதாரங்கள் எரிசக்தி உள்கட்டமைப்பு, கப்பல் போக்குவரத்து மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையைச் சார்ந்துள்ளன என்றும், "இவை அனைத்தையும் தன்னால் சீர்குலைக்க முடியும் என்பதை இரான் காட்டியுள்ளது"என்றும் டூசி குறிப்பிடுகிறார்.
குறிப்பாக, உலகப் பொருளாதாரத்திற்கு முக்கியமான நீர்வழிகளான பாரசீக வளைகுடா மற்றும் ஹோர்மூஸ் நீரிணையை இரான் தனக்கு சாதகமானதாக பயன்படுத்தி வருகிறது என்று அவர் கூறுகிறார்.
Getty Images
இருப்பினும், டிரெண்ட்ஸ் ரிசர்ச் & அட்வைசரி அமைப்பின் மூத்த நிர்வாக இயக்குநரும், டிரம்பின் முதல் நிர்வாகத்தில் பாதுகாப்புத்துறை அதிகாரியுமான பிலால் சாப், ''வளைகுடா நாடுகள் இரானைத் தொடர்ந்து தாக்காமல் இருந்தால், 'எந்த விளைவுகளையும் சந்திக்காமல் கடுமையான சேதத்தை ஏற்படுத்தலாம்' என்ற செய்தியை அவை இரானுக்கு அளிக்கின்றன" என்கிறார்.
"பதிலடி கொடுப்பதன் நோக்கம், குறுகிய காலத்தில் இரானைத் தனது தாக்குதல்களை நிறுத்த கட்டாயப்படுத்துவதாகவும், நீண்ட காலத்தில் எதிர்கால இரானிய தாக்குதல்களுக்கு எதிராக ஒரு தடுப்பு நடவடிக்கையை உருவாக்குவதாகவும் இருக்கும்."
மேலும், வளைகுடா நாடுகளின் எந்தவொரு தாக்குதலும் போரில் அர்த்தமுள்ள தாக்கத்தை ஏற்படுத்துமா அல்லது உத்தி ரீதியாக புத்திசாலித்தனமாக இருக்குமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியாததால், இதில் அபாயங்கள் "கணிசமானதாக" இருக்கும் என்றும் அவர் கூறுகிறார்.
இஸ்ரேலுடனும் அதன் பிராந்திய நோக்கங்களுடனும் தங்களை இணைத்துக் கொள்ள வளைகுடா நாடுகளிடையே தயக்கம் நிலவுகிறது என்று லண்டன் கிங்ஸ் கல்லூரியின் பாதுகாப்பு ஆய்வுகள் துறையின் சர்வதேச பாதுகாப்பு விரிவுரையாளர் ராப் கெய்ஸ்ட் பின்ஃபோல்ட் கூறுகிறார்.
மேலும், "இஸ்ரேல்தான் அமெரிக்காவை இந்தப் போருக்குள் இழுத்துவிட்டதாக ஒரு உணர்வு நிலவுகிறது," என்று அவர் குறிப்பிடுகிறார்.
EPA '2003-ஆம் ஆண்டு நிகழ்ந்த சம்பவங்களின் நினைவுகள்'
இராக் உடனான அமெரிக்கா தலைமையிலான போரின் தாக்கம் இன்னும் பல வளைகுடா தலைவர்களின் மனதில் பெரிய அளவில் நிழலாடுகிறது என்று பின்ஃபோல்ட் கூறுகிறார்.
2003-இல், அமெரிக்கா இராக் மீது படையெடுத்து சதாம் உசைனின் அரசாங்கத்தை விரைவாக வீழ்த்தியது. ஆனால் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட அதிகார வெற்றிடம், இராக்கிலும் அதன் அண்டை பிராந்தியங்களிலும் கிளர்ச்சி, வன்முறை மற்றும் பல ஆண்டுகால நிலையற்ற தன்மைக்கு வழிவகுத்தது.
"2003ம் ஆண்டு நிகழ்ந்த சம்பவங்களின் நினைவுகள் நிழலாடுகின்றன" என்கிறார் பின்ஃபோல்ட்.
"இது தங்கள் வீட்டு வாசலிலேயே குழப்பம் மற்றும் நிலையற்ற தன்மைக்கான கதவுகளைத் திறந்துவிடும் என்றும், இரான் தனது செல்வாக்கை விரிவுபடுத்த அனுமதிக்கும் என்றும் அவர்கள் அஞ்சினர். அவர்களின் பயம் பெரும்பாலும் உண்மையானது என நிரூபிக்கப்பட்டது".
அமெரிக்கா இப்போது "தெளிவான குறிக்கோள்கள் அல்லது போருக்குப் பிந்தைய காலத்திற்கான பாதை இல்லாத ஒரு முடிவற்ற போரை " நடத்துவதாகவும், அதன் விளைவாக ஏற்படும் "குழப்பங்களுடன் பிராந்தியம் சிக்கிக்கொள்ளும்" என்றும் வளைகுடா நாடுகள் இப்போது அஞ்சுவதாக பின்ஃபோல்ட் கூறுகிறார்.
அமெரிக்காவும் இஸ்ரேலும் இந்தப் போரைத் தொடங்கியதில் வளைகுடா நாடுகளில் அதிருப்தி இருந்தாலும், அவர்கள் இன்னும் அமெரிக்க ராணுவப் பாதுகாப்பையே பெரிதும் நம்பியிருக்கிறார்கள்.
அமெரிக்க ராணுவத் தளங்கள் மற்றும் படைகளுக்கு இடமளிப்பதுடன், பல வளைகுடா நாடுகள் உளவுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்கின்றன, மேலும், அமெரிக்க வான் பாதுகாப்பு அமைப்புகளைச் சார்ந்துள்ளன.
இரானில் இருந்து வந்த பெரும்பாலான ஏவுகணைத் தாக்குதல்களை இந்த வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்துள்ளன என வளைகுடா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
"அரசியல் மட்டத்தில் அவர்கள் (வளைகுடா நாடுகள்) அமெரிக்காவைக் கேள்விக்குட்படுத்தினாலும், செயல்பாட்டு மற்றும் ராணுவ மட்டத்தில் அந்த உறவு கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, உண்மையில் அந்தச் சோதனையில் மிகவும் சிறப்பாகவே தேர்ச்சி பெற்றுள்ளது" என்கிறார் பின்ஃபோல்ட்.
கடந்த மாதம் தாக்குதல்களைத் தொடங்கியதில் இருந்து, இரானின் அணு ஆயுதத் தயாரிப்புத் திறனை அழிப்பது முதல் ஆட்சி மாற்றம் வரை தனது ராணுவ நடவடிக்கைகளுக்கான பல்வேறு நோக்கங்களை அமெரிக்கா கோடிட்டுக் காட்டியுள்ளது.
இருப்பினும், இந்தத் தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவர ராஜீய நடவடிக்கைகள் மட்டுமே ஒரே வழி என்று வளைகுடா தலைவர்கள் கருதுவதாக பின்ஃபோல்ட் கூறுகிறார்.
இரான் அனைத்து வளைகுடா நாடுகளையும் "ஒரே தீவிரத்துடன்" குறிவைக்கவில்லை என்றும், இது அந்த நாடுகளுடன் இரான் கொண்டுள்ள மாறுபட்ட உறவுகளைப் பிரதிபலிக்கிறது என்றும் பின்ஃபோல்ட் கூறுகிறார்.
இந்தப் போரின் போது ஐக்கிய அரபு எமிரேட்ஸும் அதிகப்படியான தாக்குதலுக்கு உள்ளான நாடுகளில் ஒன்றாக உள்ளது.
2020-ஆம் ஆண்டில், அதுவும் பஹ்ரைனும் இஸ்ரேலுடன் தங்களது உறவுகளைச் சீரமைத்தன.
இதற்கு நேர்மாறாக, இரானுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாகப் பேச்சுவார்த்தையாளராகப் பணியாற்றி வரும் ஓமன், இரானால் மிகக் குறைந்த அளவே குறிவைக்கப்பட்டுள்ளது.
"புதிய இரானிய தலைவரை (மொஜ்தபா காமனெயி) வாழ்த்திய ஒரே வளைகுடா நாடு ஓமன் மட்டுமே" என்று கூறிய பின்ஃபோல்ட் "வளைகுடா நாடுகள் இதை விரும்பவில்லை" என்றும் குறிப்பிடுகிறார்.
துபை பொதுக் கொள்கை ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் ஜெனரல் முகமது பஹாரூன், "இரான் வளைகுடா நாடுகளைத் தனக்கு எதிரான ஒரு விரிவடைந்து வரும் கூட்டணியை நோக்கித் தள்ளுகிறது" என்றார்.
மேலும், "வளைகுடா நாடுகளைத் தாக்குவதன் மூலம், இரான் அவர்களை எதிரிகளாக மாற்றி, யாரும் விரும்பாத ஒரு விரிவான போருக்கான அபாயத்தை ஏற்படுத்துகிறது," என்று அவர் கூறுகிறார்.
Reuters இரானிய தாக்குதலால் பஹ்ரைனில் சேதமடைந்த ஒரு கட்டடம் எது பதிலடியைத் தூண்டக்கூடும் ?
வளைகுடா நாடுகள் இப்போது வரை பதிலடி கொடுக்காமல் ஒதுங்கியிருந்தாலும், எரிசக்தி ஏற்றுமதியைச் சீர்குலைக்கும் தாக்குதல்கள் தொடர்ந்தாலோ அல்லது தீவிரமடைந்தாலோ இந்த நிலை மாறக்கூடும் என்று பிரிட்டன் சிந்தனைக் குழுவான ரூசியின் மூத்த ஆய்வாளர் எச்.ஏ. ஹெல்லியர் கூறுகிறார்.
மேலும், எரிசக்தி நிலையங்கள் மீது நடத்தப்படும் ஒரு பெரிய அளவிலான தாக்குதல், அவர்களின் சிந்தனையை மாற்றக்கூடிய ஒரு வாய்ப்பாக அமையும் என்று அவர் தெரிவித்தார்.
இரானின் ஆதரவு பெற்ற ஆயுதக்குழுக்கள் வளைகுடா நாடுகளைக் குறிவைத்தால், அவர்களின் அணுகுமுறையில் மற்றொரு மாற்றம் ஏற்படக்கூடும்.
"ஹூத்தி கிளர்ச்சியாளர்களால் அவர்கள் தாக்கப்பட்டால், அது ஒரு புதிய போர்க்களத்தைத் திறக்கும்," என்கிறார் பின்ஃபோல்ட்.
இந்தச் சூழலில், வளைகுடா நாடுகள் இந்த மோதலை இனி அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போராக மட்டும் பார்க்காமல், தங்களது சொந்தப் போராகவும் கருதக்கூடும் என்றும் அவர் கூறுகிறார்.
Reuters
எது எப்படியிருந்தாலும், வளைகுடா நாடுகள் இப்போது வரை பதிலடி கொடுக்கவில்லை என்றாலும், இரானின் இந்த உத்தி "அதிக ஆபத்தானது" என்று பின்ஃபோல்ட் குறிப்பிடுகிறார்.
இதுகுறித்துப் பேசிய அவர், "இரானியர்கள் வளைகுடா நாடுகளுடன் தங்களுக்கு இருந்த அனைத்து உறவுகளையும் முறித்துக் கொள்கிறார்கள். இந்த மோதலை இரான் தனது வாழ்வா சாவா பிரச்னையாக எவ்வளவு தூரம் கருதுகிறது என்பதை இது காட்டுகிறது," என்றார்.
குறிப்பாக பொது இடங்கள் இலக்கு வைக்கப்பட்டு தாக்கப்படும்போது, இரான் தங்களைத் தொடர்ந்து தாக்குவதை வளைகுடா நாடுகள் "ஏற்றுக்கொள்ளாது" என்று ஹெல்லியர் தெரிவித்தார்.
அமெரிக்காவைக் கட்டுப்படுத்த வளைகுடா நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்கும் இரானின் இந்த அதிக ஆபத்துள்ள உத்தி, இரானுக்கே எதிராகத் திரும்ப வாய்ப்புள்ளது என்று அவர் கருதுகிறார்.
தொடர்ந்து பேசிய அவர், "தொடக்கத்தில் இரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரை அவர்கள் எதிர்த்திருந்தாலும், இரானின் பதிலடித் தாக்குதல்களால் இப்போது தங்களது சொந்தப் பாதுகாப்பிற்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று அவர்கள் முடிவு செய்யலாம். எனவே, இரானிடமிருந்து வரும் உடனடி அச்சுறுத்தலை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கையை ஆதரிப்பதே புத்திசாலித்தனம் என்றும் அவர்கள் கருதக்கூடும்"என்றும் அவர் விளக்கினார்.
இதற்கிடையே மத்திய கிழக்கில் நிலவும் மோதலுக்கு ஒரு "முழுமையான தீர்வு" காண்பது குறித்து இரானுடன் "பயனுள்ள பேச்சுவார்த்தை" நடைபெற்றுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஆனால், பேச்சுவார்த்தைகள் குறித்த அமெரிக்க அதிபர் டிரம்பின் கூற்றை இரான் வெளியுறவு அமைச்சகம் நிராகரித்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு