உத்தரப்பிரதேசத்தில் மறைந்த தனது கணவரின் நண்பருடன் காதல் உறவு வைத்திருந்த பெண் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார். இந்த கொடூர சம்பவத்தை அவரது காதலனே செய்தது மிகப்பெரிய அளவில் அதிர்வலைகளை ஏற்படித்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள நர்சேனா கிராமத்தில் தலை துண்டிக்கப்பட்ட பெண்ணின் சடலம் ஒன்றை போலீசார் கண்டறிந்தனர். கொலை செய்யப்பட்டது யார் என்பதை அடையாளம் காணும் பணியும், விசாரணையும் தொடங்கியது. உயிரிழந்த பெண்ணின் தலையில்லா சடலத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்தனர். இதன்மூலம் உயிரிழந்த பெண் உத்தரப் பிரதேசத்தின் புலந்தஷார் பகுதியைச் சேர்ந்த பாப்லி என்பதை அவரது குடும்பத்தினர் உறுதி செய்தனர்.
இதனைத் தொடர்ந்து பாப்லியின் குடும்பத்தாரிடம் விசாரணை நடைபெற்றது. இதில் சில தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தது. அதாவது பாப்லிக்கு அஜய் என்ற நபருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால் அவர் புற்றுநோய் காரணமாக சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இதன்பின் தனிமையில் இருந்த பாப்லிக்கு அஜயின் நண்பரான விகாஸூடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
ஆனால் விகாஸூக்கு அவரது குடும்பத்தினர் கடந்தாண்டு டிசம்பரில் வேறொரு பெண்ணை நிச்சயம் செய்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பாப்லி தன்னை திருமணம் செய்துக் கொள்ளுமாறு வற்புறுத்த தொடங்கியுள்ளார். இதனால் விகாஸூக்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டது. இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. பாப்லி விகாஸிடம் தன்னை எப்படியாவது திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வந்தார்.
இதனால் ஒரு கட்டத்தில் எரிச்சலடைந்த விகாஸ் தன் மைத்துனரான அமன் ஆகியோரின் உதவியுடன் பாப்லியைக் கொல்ல முடிவு செய்தார். அவர்களின் திட்டப்படி பாப்லி கழுத்து அறுக்கப்பட்டு தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து விகாஸ் மற்றும் அமன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். விகாஸின் சகோதரர் தலைமறைவாக உள்ளார். அவர்களிடம் இருந்து இரண்டு துப்பாக்கிகள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் பாப்லியின் தலையை கண்டறியும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பையில் ஒன்பது வயது சிறுமி வெறிநாய்க்கடி நோயால் உயிரிழந்துள்ளார். ஆறு மாதங்களுக்கு முன்பு சிறுமியான சஹானியை ஒரு தெரு நாய் கடிக்க முயன்றது. இதில் சிறுமிக்கு நகக்கீறல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து வெறிநாய்க்கடி தடுப்பூசி போடுவதற்காக சிறுமி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாள். ஆனால் ஊசி போட்டுக் கொள்வதில் இருந்த பயம் காரணமாக அச்சிறுமி அதனை மறுத்த நிலையில் நோய்த்தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.