நியூயார்க் விமான நிலையத்தில் பரபரப்பு...! தீயணைப்பு வாகனத்தில் மோதிய விமானம்...! - 2 பேர் உயிரிழப்பு
Seithipunal Tamil March 24, 2026 06:49 PM

அமெரிக்காவின் லாகார்டியா சர்வதேச விமான நிலையத்தில் அதிர்ச்சியூட்டும் விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. கனடாவின் மாண்ட்ரியல் நகரில் இருந்து புறப்பட்ட ‘ஏர் கனடா எக்ஸ்பிரஸ்’ நிறுவனத்தின் சி.ஆர்.ஜே-900 வகை பயணிகள் விமானம், தரையிறங்கிய சில நொடிகளிலேயே ஓடுதளத்தில் நின்றிருந்த தீயணைப்பு வாகனத்தை மோதியது.ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 11.37 மணியளவில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில், விமானத்தின் முன்பகுதி கடுமையாக சேதமடைந்தது.

இந்த விபத்தின் தாக்கம் அதிகமாக இருந்ததால், விமானத்தை இயக்கிய முதன்மை விமானி மற்றும் துணை விமானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், தீயணைப்பு வாகனத்தில் இருந்த ஒரு சார்ஜென்ட் மற்றும் காவலர் இருவருக்கும் கடுமையான காயங்கள், குறிப்பாக எலும்பு முறிவுகள் ஏற்பட்டதால், அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களின் நிலைமை தற்போது சீராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விமானத்தில் பயணம் செய்த 72 பயணிகள் மற்றும் 4 பணியாளர்களில் பெரும்பாலோர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். சிலருக்கு மட்டும் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்த விபத்தைத் தொடர்ந்து, லாகார்டியா விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு, அவசர மீட்பு பணிகள் மற்றும் தொடக்க விசாரணைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.

இதன் காரணமாக, அங்கு தரையிறங்க இருந்த 18-க்கும் மேற்பட்ட விமானங்கள் மாற்று விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.