தமிழக தேர்தல் சூடுபிடித்தது: பறக்கும் படைகளின் வேட்டையில் ரூ.152 கோடி சிக்கியது....!
Seithipunal Tamil March 24, 2026 05:50 PM

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், பறக்கும் படைகள் மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்கள் மேற்கொண்ட சோதனைகளில் இதுவரை ரூ.152 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட அறிக்கையில், மார்ச் 15ஆம் தேதி தேர்தல் அறிவிப்பு வெளியாகியதன் பின்னர், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், உரிய ஆவணங்களின்றி ரூ.50,000-க்கு மேற்பட்ட ரொக்கத் தொகையையோ, ரூ.10,000-க்கு அதிகமான மதிப்புள்ள பொருட்களையோ எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்த, தமிழகம் முழுவதும் தலா 2,106 பறக்கும் படைகள் மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இக்குழுக்களின் தீவிர சோதனைகளால் கணிசமான அளவில் சட்டவிரோத பரிமாற்றங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

நேற்றைய நிலவரப்படி, ரூ.30.53 கோடி ரொக்கம், ரூ.72 லட்சம் மதிப்பிலான மது, ரூ.6.47 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள், ரூ.92.02 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், மேலும் ரூ.22.19 கோடி மதிப்பிலான இலவசப் பொருட்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன.

மொத்தத்தில் ரூ.152 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.