“அவர் என்ன நிறுத்துறது, நான் சொல்றேன்.. போர் தொடரும்“; நெதன்யாகு அறிவிப்பால் எகிறிய பதற்றம்
ஸ்ரீராம் ஆராவமுதன் March 24, 2026 06:44 PM

மேற்காசியாவில் அமெரிக்கா இஸ்ரேல் - ஈரான் இடையே கடுமையான போர் நடைபெற்றுவரும் நிலையில், அதில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. சில நாட்களுக்கு முன்பு, ட்ரம்ப் ஈரானுக்கு கெடு விதித்ததும், பதிலுக்கு அவர்கள் எச்சரித்ததும் நடந்தது. ஆனால், திடீரென ஈரான் மீதான தாக்குதலை நிறுத்துவதாக ட்ரம்ப் அறிவித்தார். இதையடுத்து, தங்கள் கடும் எச்சரிக்கையால் ட்ரம்ப் பின்வாங்கிவிட்டதாக ஈரான் கூறியது. இவையெல்லாம் ஒருபுறமிருக்க, ஈரான் மீதான தாக்குதல் தொடரும் என்று அதிரடியை கிளப்பியுள்ளார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு. அவர் என்ன கூறியிருக்கிறார் என்பதை இப்போது பார்க்கலாம்.

ட்ரம்ப் ஈரான் மாறி மாறி கொடுத்த வார்னிங்

கடந்த 22-ம் தேதி தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில்  அமெரிக்க அதிபர் வெளியிட்ட பதிவில், “இன்றிலிருந்து சரியாக 48 மணி நேரத்திற்குள், ஈரான் எந்தவித அச்சுறுத்தலும் இன்றி ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாகத் திறக்காவிட்டால் , அமெரிக்கா ஈரானின் பல்வேறு மின் உற்பத்தி நிலையங்களை தாக்கி அழித்துவிடும்; முதலில் மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையத்திலிருந்து தொடங்குவோம்! என கூறியிரந்தார்.

அமெரிக்காவின் இந்த மிரட்டலுக்குப் பதிலளிக்கும் வகையில், ஈரானிய ராணுவத்தின் செயல்பாட்டுத் தலைமையகம் அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், தங்கள் நாட்டின் எரிபொருள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது எதிரிகள் கை வைத்தால், வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவுக்கு தொடர்புடைய அனைத்து முக்கிய உள்கட்டமைப்புகளும் ஈரானின் நேரடி இலக்காக மாறும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், மக்களின் அடிப்படைத் தேவையான கடல்நீரை குடிநீராக்கும் ஆலைகள் மற்றும் தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்புகள் மீதும் தாக்குதல் நடத்துவோம் எனவும் ஈரான் எச்சரித்தது. ஈரானின் மிலிட்டரி ஆபரேஷனல் கமாண்ட் கதம் அன்பியா இதை உறுதி செய்துள்ளாக AFP செய்தி வெளியிட்டது.

தாக்குதலை நிறுத்துவதாக அறிவித்த ட்ரம்ப் - நிராகரித்த ஈரான்

இதைத் தொடர்ந்து, 48 மணி நேரம் முடிவதற்கு முன்னதாகவே, ஈரான் மீதான தாக்குதலை 5 நாட்களுக்கு நிறுத்தி வைக்க அமெரிக்க ராணுவத் துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக ட்ரம்ப் அறிவித்தார். ஈரான் உடன் 2 நாட்கள் நடைபெற்ற பேச்சுவார்த்தை சுமூகமாக இருப்பதால் இந்த நடவடிக்கையை எடுப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்த ஈரான், அமெரிக்காவுடன் எந்தவித பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும், தங்களது கடும் எச்சரிக்கை காரணமாகவே ட்ரம்ப் பின்வாங்கிவிட்டதாகவும் தெரிவித்திருந்தது.

தாக்குதல் தொடரும் என நெதன்யாகு அறிவிப்பு

இப்படிப்பட்ட சூழலில், ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தொடர்ந்து தாக்குதல் நடத்தும என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். ஈரானின் ஏவுகணைத் திட்டத்தையும், அணுசக்தித் திட்டத்தையும் தொடர்ந்து நசுக்குவோம் என்று கூறியுள்ள அவர், லெபனானின் ஹெஸ்புல்லா அமைப்பு மீதும் தாக்குதல் தொடரும் என கூறியுள்ளார்.

மேலும், அமெரிக்க ராணுவத்தின் ஆதரவுடன், ஈரான் உடனான போரில் முக்கிய இலக்குகளை அடைவோம் என்றும், ஈரானின் ஏவுகணை மற்றும் அணு திட்டங்களை முடியடித்து வருவதாகவும் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

இதனால், ஏற்கனவே பதற்றம் நிலவும் மத்திய கிழக்கில், அச்சம் அதிகரித்துள்ளது. ஏற்கனவே வளைகுடா நாடுகளில் கடும் சேதங்களை விளைவித்து வரும் ஈரான், இந்த அறிவிப்பால் இன்னும் என்னென்ன செய்யப் போகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.