வேலூர் மாவட்டத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி பிரபு, தனது மனைவி ஜெயந்தி மற்றும் உறவினர் சரவணன் ஆகியோரால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபுவின் சித்தி மகனான சரவணனுக்கும் ஜெயந்திக்கும் இடையே ரகசியத் தொடர்பு இருந்து வந்த நிலையில், இதனை அறிந்த பிரபு அவர்களைக் கடுமையாக எச்சரித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ஜெயந்தி, தங்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவரைத் தீர்த்துக்கட்ட சரவணனுடன் சேர்ந்து திட்டம் தீட்டினார்.கடந்த 21-ம் தேதி பிரபு மதுபோதையில் வீட்டிற்கு வந்து கீழே விழுந்தபோது, அதனைப் பயன்படுத்திக் கொண்ட ஜெயந்தியும் சரவணனும் அவரைத் தாக்கினர். ஜெயந்தி தனது கணவரின் உடல் மீது ஏறி அமர்ந்து கொண்டு திட்டியபடியே பிடித்துக்கொள்ள, சரவணன் பிரபுவின் கழுத்தை இறுக்கிக் கொலை செய்தார்.
பின்னர், எதற்கும் தெரியாமல் இருக்க பிரபு மதுபோதையில் கீழே விழுந்துவிட்டதாகக் கூறி, அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு ஜெயந்தி அழைத்துச் சென்றார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.இது குறித்து போலீசார் விசாரணை நடத்திய நிலையில், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் பிரபு கழுத்து இறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதியானது.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் ஜெயந்தியிடம் தீவிர விசாரணை நடத்தியதில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் சரவணனுடன் சேர்ந்து கணவரைப் படுகொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் ஜெயந்தி மற்றும் சரவணன் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.