நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததிலிருந்து அவரது பேச்சுகள் மற்றும் அரசியல் செயல்பாடுகள் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் வெளிவந்து வருகின்றன. அந்த வகையில், விஜய்யின் வேலூர் கூட்டத்தில் பேசிய உரையைத் தொடர்ந்து நடிகையும் சின்னத்திரை பிரபலமுமான ஜூலி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு கடுமையாக விமர்சித்திருந்தார்.
அந்த வீடியோ வெளியானதும், விஜய் ரசிகர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழக (தவெக) ஆதரவாளர்கள் ஜூலியின் பதிவின் கமெண்ட் பகுதியில் மட்டுமல்லாமல் பல சமூக வலைதளங்களிலும் அவரையும் அவரது குடும்பத்தினரையும் கடுமையாக விமர்சித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஜூலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதற்குப் பிறகும் ஜூலி மற்றும் விஜய் ரசிகர்களுக்கிடையிலான சமூக வலைதள மோதல் தொடர்ந்துகொண்டே உள்ளது. தவெக தரப்பில் ஏதேனும் சர்ச்சை ஏற்பட்டாலோ அல்லது தவறு நடந்தாலோ அதைப் பற்றியும் ஜூலி தொடர்ந்து விமர்சனங்கள் வெளியிட்டு வருகிறார்.
முன்னதாக வெளியிட்ட வீடியோவில் ஜூலி, “விஜய் அண்ணா, நீங்கள் கூறும் கதைகளை கேட்டுவிட்டு உங்கள் ரசிகர்கள் ஏதாவது தவறான செயல்களில் ஈடுபட்டால் என்ன ஆகும்? ஏற்கனவே பலர் உயிரிழந்த சம்பவங்கள் நடந்துள்ளன. அந்த எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டாம்” என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், சமீபத்தில் தஞ்சாவூரில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் கலந்து கொண்ட விக்னேஷ் என்ற மாணவர் விபத்தில் உயிரிழந்த சம்பவத்தை குறிப்பிட்டு ஜூலி மீண்டும் வீடியோ வெளியிட்டு விஜய்யை விமர்சித்துள்ளார்.
அந்த வீடியோவில் அவர், “உங்களை பார்க்கவே அந்த மாணவர் வந்தார். ஆனால் அவர் உயிரிழந்துவிட்டார். அதன் இழப்பு யாருக்கு? அவருடைய பெற்றோருக்குத்தான். இதை அரசியல் பேசக் கூடாது என்று நினைத்தாலும் மனது கேட்கவில்லை. நான் முன்பே சொன்னேன், அந்த எண்ணிக்கை அதிகரிக்கக்கூடாது என்று” என்று கூறியுள்ளார்.
மேலும், “விஜய் ரசிகர்கள் கமெண்ட் செக்ஷனில் மிகவும் மோசமாக பேசுகிறார்கள். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்வார்கள். ஆனால் யாரிடமிருந்து பாதுகாப்பு இல்லை தெரியுமா? உங்கள் ரசிகர்களிடமிருந்துதான்” என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஜூலி வெளியிட்ட இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதே நேரத்தில், இந்த விவகாரம் குறித்து விஜய் அல்லது தவெக தரப்பில் இருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ பதிலும் வெளியாகவில்லை.