மத்திய கிழக்கில் நிலவும் போர்ச்சூழலால் கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சமாளிக்க, இறக்குமதி ஒப்பந்தங்களை இந்தியா வேகப்படுத்தியுள்ளது.
ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் ஏற்பட்டுள்ள விநியோக தட்டுப்பாட்டை தவிர்க்க, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளிடமிருந்து தள்ளுபடி விலையில் எண்ணெய் வாங்க இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கடந்த 11 ஆண்டுகளில் எரிசக்தி இறக்குமதி செய்யும் நாடுகளின் எண்ணிக்கையை 27-லிருந்து 41-ஆக இந்தியா உயர்த்தியுள்ளதாக பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தற்போது இந்தியாவில் 74 நாட்களுக்கு தேவையான எண்ணெய் இருப்பு உள்ளதாகவும், பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் அரசு உறுதியளித்துள்ளது. அமெரிக்கா வழங்கியுள்ள 30 நாள் சலுகையை பயன்படுத்தி, ஏற்கனவே கப்பல்களில் ஏற்றப்பட்ட ரஷ்ய மற்றும் ஈரானிய எண்ணெய்யை இந்தியா பெற்று வருகிறது.
ஏப்ரல் மாதத்திற்குள் சுமார் 60 மில்லியன் பேரல் ரஷ்ய எண்ணெய் இந்தியாவிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், உள்நாட்டு எல்பிஜி உற்பத்தியை 25 சதவீதம் அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. போர் நீடித்தால் விநியோகத்தில் பெரும் சவால்கள் ஏற்படும் என்பதால், மாற்று வழிகளை உருவாக்குவதில் இந்தியா தீவிரமாக உள்ளது.
Edited by Siva