லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, 2026 ஐபிஎல் சீசனை முன்னிட்டு அணியின் திட்டங்கள் குறித்து முக்கிய கருத்துகளை வெளியிட்டுள்ளார். ஒரு அணிக்கு உண்மையான மரியாதை கிடைப்பது பிளேஆஃப் சுற்றை அடைவதால் அல்ல, கோப்பையை வெல்வதால்தான் என்று அவர் தெரிவித்தார்.
ஜியோஸ்டாருக்கு அளித்த பேட்டியில் பேசிய சஞ்சீவ் கோயங்கா, “ஒரு அணியின் அடையாளம் படிப்படியாக உருவாகும். ஆனால் நீங்கள் கோப்பையை வெல்லும் வரை முழுமையான மரியாதையும் ரசிகர்களின் ஆதரவும் கிடைக்காது. நாங்கள் இரண்டு முறை பிளேஆஃப் சுற்றுக்குச் சென்றிருக்கிறோம். ஆனால் அது போதாது. எங்கள் இலக்கு கோப்பையை வெல்வதே” என்று கூறினார்.
கடந்த சீசனில் சில சவால்கள் இருந்தபோதிலும் அணியின் சில முடிவுகள் சிறப்பாக அமைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். குறிப்பாக எய்டன் மார்க்ரம் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோரை தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறக்கிய முடிவு வெற்றிகரமாக அமைந்ததாக கூறினார். மார்க்ரம் 13 போட்டிகளில் 445 ரன்களும், மார்ஷ் 13 போட்டிகளில் 627 ரன்களும் எடுத்தனர்.மேலும், புதுமுக வீரரான திக்வேஷ் ரதி 13 போட்டிகளில் 14 விக்கெட்டுகள் எடுத்தது அணிக்கு பெரிய பலமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
அதே நேரத்தில் கடந்த சீசனில் அணியின் பந்துவீச்சு பலம் குறைவாக இருந்ததை ஒப்புக்கொண்ட அவர், “கடந்த ஆண்டு எங்களிடம் வலுவான பந்துவீச்சு யூனிட் இல்லை என்பதை நாங்கள் உணர்ந்தோம். அதனால் இந்த முறை உள்நாட்டு இந்திய பந்துவீச்சாளர்களை மையமாகக் கொண்டு ஒரு வலுவான பந்துவீச்சுப் படையை உருவாக்கியுள்ளோம்” என்றார்.
2026 ஐபிஎல் சீசனுக்கான அணியில் தேவையான அனைத்தும் உள்ளதாகவும், இனி தனிப்பட்ட வீரர்களின் திறமையை மட்டும் நம்பாமல் ஒரு அணியாக இணைந்து செயல்பட வேண்டும் என்பதே முக்கியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
“கடந்த சீசனில் பல வீரர்கள் தனிப்பட்ட முறையில் சிறப்பாக விளையாடினர். ஆனால் இந்த ஆண்டு எங்கள் நோக்கம் வேறுபட்டது. நாங்கள் ஒரு அணியாக ஒன்றுபட்டு வெல்ல விரும்புகிறோம்” என்று சஞ்சீவ் கோயங்கா தெரிவித்துள்ளார்.