தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணியில் நீண்டகாலமாக இருக்கும் விசிக, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளை விட தேமுதிகவுக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டதன் பின்னணியில் உள்ள முக்கிய காரணங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு அடுத்தபடியாக தேமுதிக 10 இடங்களைப் பெற்றுள்ளது. ஆனால், கடந்த முறை 6 இடங்களில் வென்ற விசிகவுக்கு 8 இடங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 5 இடங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்திற்கு தொகுதிகளே ஒதுக்கப்படாத நிலையில், வந்த உடனேயே தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் மற்றும் 10 தொகுதிகள் வழங்கப்பட்டது கூட்டணிக்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவின் இந்த அதிரடி முடிவுக்கு முக்கியக் காரணம் ‘வன்னியர்’ சமூக வாக்குகள் எனக் கூறப்படுகிறது. வட மாவட்டங்களில் பாமக தற்போது இரண்டு அணிகளாகப் பிரிந்து அதிமுக மற்றும் சசிகலாவுடன் கூட்டணி வைத்துள்ளது. மேலும், வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த வேல்முருகன் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது அக்கட்சிக்கு பின்னடைவாகக் கருதப்பட்டது.
இந்த இடத்தைப் பூர்த்தி செய்ய தேமுதிக உதவும் என திமுக தலைமை நம்புகிறது. கடந்த 2011 தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக 29 இடங்களில் வென்றது. அந்தத் தொகுதிகள் பெரும்பாலும் வன்னியர்கள் அதிகம் வசிக்கும் வட மாவட்டத் தொகுதிகளாகும். ஜாதி அரசியல் பிடிக்காத வன்னியர் சமூக மக்கள் மத்தியில் விஜயகாந்துக்கு இருந்த நற்பெயர், இப்போதும் ஓட்டுகளாக மாறும் என முதல்வர் ஸ்டாலின் கணக்கு போட்டுள்ளார்.
விஜயகாந்தின் மறைவுக்குப் பிறகு நடைபெறும் முதல் தேர்தல் இது என்பதால், மக்கள் மத்தியில் இருக்கும் அனுதாப அலை தேமுதிகவுக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சார்ந்த நாயுடு சமூக மக்களின் வாக்குகள் மதுரை, தேனி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக இருப்பதால், அதுவும் கூட்டணிக்கு பலம் சேர்க்கும் எனத் தெரிகிறது. மேலும் கடந்த 2021 தேர்தலில் தேமுதிக வெறும் 0.43 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தாலும், பலமான கூட்டணியில் இணையும்போது அந்த வாக்குகள் பல மடங்கு உயர்ந்து வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக மாறும் என்பதே திமுகவின் வியூகமாகப் பார்க்கப்படுகிறது.