சென்னை ஆவடியைச் சேர்ந்தவர் 42 வயதான ஜாகீர் உசேன் மற்றும் அயப்பாக்கத்தைச் சேர்ந்தவர் 49 வயதான அருண் கிருஷ்ண ராஜா. இவர்கள் இருவரும்கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை முதலீடு செய்து லாபம் ஈட்டுவதற்கு கடந்த ஆண்டு முடிவு செய்துள்ளனர்.
அன்ஹத வகையில் ஏதாவது டிரேடிங்கில் முதலீடு செய்யலாம் என எதிர்பாத்து காத்திருந்த நிலையில், அவர்கள் எதிர்பார்த்தது போல வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் 'ஆன்லைன் டிரேடிங்' தொடர்பாக விளம்பரம் வந்துள்ளது.
ஆனால் அதன் உண்மை தன்மையை அறியாத இவர்கள் உடனே சற்றும் யோசிக்காமல் அதில் குறிப்பிட்டிருந்த செல்போன் நம்பருக்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அப்போது எதிர்திசையில் பேசியவர்கள் முதலீடு செய்யும் பணத்திற்கு ஏற்ப மும்மடங்கு லாபம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
அதைக் கேட்டு தலைகால் புரியாத நிலையில் ஜாகீர் உசேன், மர்ம நபர்கள் கூறிய வங்கிக் கணக்குகளில் 28 லட்சத்து 70 ஆயிரம் அனுப்பியுள்ளார். இதேபோன்று அருண் கிருஷ்ண ராஜா 23 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளார்.
ஆனால், ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்த பணத்திற்கு எந்தவொரு லாபமும் வராமல் இருந்துள்ளது. அத்துடன் அவர்கள் முதலீடு செய்த பணமும் கிடைக்கவில்லை. இதையடுத்துதான் இருவரும் ஆசை வார்த்தையை நம்பி, மொத்த பணத்தையும் மோசடிக்காரர்களிடம் இழந்துள்ளதை உணர்ந்துள்ளனர். பின்னர், இந்த மோசடி குறித்து இவர்கள் ஆவடி சைபர் கிரைம் பிரிவில் கடந்த ஆண்டு புகார் அளித்துள்ளனர். புகாரின்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.
இதில் பணம் அனுப்பிய வங்கிக் கணக்குகளின் அடிப்படையில் விசாரணையை தீவிரப்படுத்தியத்தில், மோசடியில் ஈடுபட்ட நபர்கள் தருமபுரியைச் சேர்ந்த ஆறுமுகம், பாக்கியராஜ் மற்றும் திருப்பூரைச் சேர்ந்த கணேசமூர்த்தி, தினகரன் ஆகியோர் என கண்டுபிடித்துள்ளனர். அத்துடன் அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடாத்தியுளளனர்.
அப்போதுதான் அவர்கள் நான்கு பேரும் தரகராக செயல்பட்டது தெரிய வந்துள்ளது. இவர்கள்தான் அப்பாவி மக்களிடம் ஆசைவார்த்தை கூறி நம்ப வைத்து முதலீடு செய்ய வைத்துள்ளனர். தொடர்ந்து முதலீடு செய்ய வைக்கும் மோசடித் தொகைக்கு ஏற்ப 'கமிஷன்' தொகை பெற்றுள்ளனர். இதனை தெரிந்துகொண்ட போலீசார் தற்போது இடைத்தரகர் போன்று செயல்பட்டவர்களையும் கைது செய்துள்ளனர்.
ஆனால், இதற்கு பின்னால் இருந்து இவர்களை இயக்கியவர் யார் என்ற தேடுதல் வேட்டையில் போலீசார் இறங்கியுள்ளனர். ஆன்லைன் வர்த்தகம் என்ற பெயரில் 51 லட்சம் ரூபாயை மோசடி செய்த 04 பேர் கும்பல் கைது செய்யப்பட்ட சம்பவம், தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.