வகுப்பறையிலேயே மாணவியிடம் அத்துமீறிய பேராசிரியர்.. ரவுண்டு கட்டி பொளந்து எடுத்த மாணவர்கள் - வீடியோ
குலசேகரன் முனிரத்தினம் March 27, 2026 10:14 AM

Karnataka Professor: மருத்துவக் கல்லூரி வகுப்பறையில் மாணவி ஒருவரிடம் காதலை சொன்ன உதவி பேராசிரியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அத்து மீறிய உதவி பேராசிரியர்

கர்நாடகாவின் தும்குர் பகுதியில் உள்ள ஸ்ரீ சித்தார்த்தா மருத்துவக் கல்லூரியில், வகுப்பறையில் மாணவர்கள் முன்னிலையிலேயே சக மாணவிக்கு உதவி பேராசிரியர் ஒருவர் “ஐ லவ் யு” என சொன்னது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள், கல்லூரி வளாகத்திலேயே அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். மாநிலத்தின் உள்துறை அமைச்சரான பரமேஷ்வராவிற்கு சொந்தமான கல்லூரியில், மாணவியிடம் அத்துமீறி நடந்து கொண்ட உதவி பேராசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதோடு, அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

வகுப்பறையில் காதலை சொன்ன பேராசிரியர்

வகுப்பறையில் உதவி பேராசிரியரான அப்துல் என்பவர் பேசியதை சக மாணவர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அதில், “இந்த பேட்ச் மாணவர்கள் என் மீது காட்டிய அளவு கடந்த அன்பை என்னால் தவிர்க்க முடியவில்லை. உங்கள் பேட்ச் மாணவர்களில் ஒரு முக்கியமான பெண்ணிற்கு எனது காதலை வெளிப்படுத்த விரும்புகிறேன். உங்கள் ஒட்டுமொத்த பேச்சிற்கும் நான் சாக்லேட் வழங்குவேன். ஐ லவ் யு**” என ஒரு பெண்ணின் பெயரை குறிப்பிட்டு அந்த உதவி பேராசிரியர் தனது உரையை அந்த வீடியோவில் பூர்த்தி செய்துள்ளார். 

வெடித்த வாக்குவாதம்..

காதலை சொல்லிவிட்டு உடனடியாக வகுப்பறையை விட்டு வெளியே செல்ல முயன்ற பேராசிரியரை தடுத்த குறிப்பிட்ட மாணவி, உடனே கல்லூரி முதல்வரிடம் பேச வேண்டும் என தெரிவித்துள்ளார். எனில், நீ எப்படி என்னிடம் காதலை சொல்லலாம் என பேராசிரியர், நான் எப்போது உங்களை காதலிப்பதாக கூறினேன் என அதிர்ந்த குரலில் மாணவி கேள்வி எழுப்பியுள்ளார். நீ ”ஐ லவ் யு “ என்று சொல்லவில்லையா? என்னிடம் அதற்கான சிசிடிவி கேமரா ஆதாரம் உள்ளது என அப்துல் பதிலளித்துள்ளார். எனில், அதை காட்டுங்கள் என மாணவி கூற, நான் நாளை உன்னிடம் பேசுகிறேன்” என கூறி அப்துல் வகுப்பறையிலிருந்து வெளியே சென்றுள்ளார். 

உதவி பேராசிரியரை பொளந்து கட்டிய மாணவர்கள்:

சம்பவம் தொடர்பான தகவல்கள் பரவவே, சக மாணவர்கள் உதவி பேராசிரியரை சுற்றி வளைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன் உச்சகட்டமாக மாணவர்கள் சேர்ந்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுதொடர்பான வீடியோவில், ஒரு பெண் காலணியை கொண்டும் உதவி பேராசிரியை தாக்கிய வீடியோ காட்சி இடம்பெற்றுள்ளது. அதோடு, அங்கு பணியாற்றும் சிலர் சேர்ந்து மாணவர்களை அங்கிருந்து அனுப்பியுள்ளனர். இதையடுத்து உதவி பேராசிரியர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். காவல்துறையும் இதுதொடர்பாக விசாரணையை தொடங்கியுள்ளது. அவரது செயல்பாட்டால், கல்வி நிலையங்களில் அறிவை போதிக்கும் ஆசிரியர்களுக்கான நெறிமுறையே கேள்விக்குறியாகியுள்ளதாக பலரும் வேதனை தெரிவித்துள்ளனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.