எரிவாயு பற்றாக்குறை: `கேஸ் இணைப்பை துண்டிப்போம்' என பயமுறுத்தி ரூ.70 லட்சம் மோசடி... உஷார்!
Vikatan March 28, 2026 05:48 PM

ஈரான் போரால் உலகம் முழுவதும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் சமையல் எரிவாயுவிற்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் வர்த்தக சிலிண்டர் பற்றாக்குறையால் உணவகங்கள் அதிக அளவில் மூடப்பட்டுள்ளது. இந்த எரிவாயு பற்றாக்குறையை பயன்படுத்தி ஒரு கும்பல் பணம் சம்பாதிக்க ஆரம்பித்துள்ளது. இதற்கு முன்பு இணைய தள குற்றங்களில் ஈடுபடுபவர்கள் போலீஸார், அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் என்று மிரட்டி பணம் பறித்துக்கொண்டிருந்தனர்.

இப்போது சீசனுக்கு தக்கபடி தங்களது வழிகளையும் மாற்றிக்கொண்டுள்ளனர். இது குறித்து போலீஸார் கூறுகையில், ``காப்பீட்டு நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பெண்ணிற்கு அவரது மொபைல் போனில் மெசேஜ் ஒன்று வந்தது. அதில்,"இன்று இரவு உங்கள் கேஸ் இணைப்பு துண்டிக்கப்படும்" என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

அதோடு அதில் ஒரு நம்பர் கொடுக்கப்பட்டு அந்த நம்பருக்கு தொடர்பு கொள்ளும்படி அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

அப்பெண் அந்த நம்பருக்கு தொடர்பு கொண்டபோது, அதில் பேசிய நபர் உங்களது கேஸ் இணைப்பு நம்பர் பிளாக் செய்யப்பட்டுள்ளது. அதனை சரி செய்ய தாங்கள் அனுப்பும் பைலை திறந்து அதில் உள்ள தகவல்களை பூர்த்தி செய்யும்படி போனில் பேசிய நபர் தெரிவித்தார். ஆனால் அந்த பைலை அப்பெண்ணின் ஐபோனில் திறக்கவில்லை. இதையடுத்து அப்பெண் அந்த நபரை தொடர்பு கொண்டு இது குறித்து தெரிவித்தார்.

உடனே அப்பெண்ணின் கணவரின் மொபைல் போனில் திறக்கக்கூடிய பைலை அனுப்பி வைத்தார். அதில் ஏ.டி.எம் கார்டு மூலம் ரூ.7 அனுப்பும்படி கேட்டுக்கொண்டனர். அப்பெண்ணும் ரூ.7 அனுப்பி வைத்தார். ஆனால் ஏதோ தவறு நடந்துவிட்டதாகவும், எனவே வேறு ஒரு ஏ.டி.எம்.கார்டை பயன்படுத்தி ரூ.7 அனுப்பும்படிகேட்டுக்கொண்டனர். இதனால் சந்தேகம் அடைந்த அப்பெண் மேற்கொண்டு எதுவும் செய்யாமல் நிறுத்திக்கொண்டார்.

ஆனால் மறுநாள் அவரது வங்கிக்கணக்கில் இருந்து ரு.26 லட்சமும், அவரது கணவரின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.45 ஆயிரமும் எடுக்கப்பட்டு இருப்பதாக மெசேஜ் வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்து போலீஸில் புகார் செய்துள்ளார். இதே போன்று மேற்கு புறநகர் பகுதியில் வசிக்கும் ஒருவர் தனது போனிற்கு வந்த கேஸ் இணைப்பு துண்டிக்கப்படும் என்ற எச்சரிக்கையால் வந்த பைலை திறந்து அதில் உள்ள தகவல்களை பூர்த்தி செய்தபோது ரூ.20 லட்சத்தை இழந்துவிட்டார். மற்றொருவரை மர்ம நபர் தொடர்பு கொண்டு உங்கள் கேஸ் இணைப்புக்கான எரிபொருள் கட்டணம் செலுத்தவேண்டியிருக்கிறது என்றும், இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் கூறி அதனை சரி செய்ய தாங்கள் அனுப்பும் பைலை பூர்த்தி செய்யும்படி கூறினார்.

அந்த நபர் பூர்த்தி செய்தபோது அவரது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.10 லட்சம் எடுக்கப்பட்டுவிட்டது. 73 வயது ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ஒருவர், தனது வாழ்நாள் சேமிப்பான ரூ.12.25 லட்சத்தை போலி மகாநகர் கேஸ் நிறுவன லோகோவுடன் வந்த வாட்ஸ்அப் மெசேஜை நம்பி இழந்தார். இது போன்று மும்பை முழுவதும் உள்ள பகுதியில் பொதுமக்கள் ரூ.70 லட்சத்தை இழந்துள்ளனர்'' என்று தெரிவித்துள்ளனர். இது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இது குறித்து போலீஸார் கூறுகையில், ``கேஸ் ஏஜென்சியின் அதிகாரப்பூர்வ பிரதிநிதிகள் உங்கள் வங்கிக் கணக்கு, OTP அல்லது டெபிட் கார்டு பற்றிய விவரங்களை தொலைபேசியில் கேட்க மாட்டார்கள். மோசடி செய்பவர்கள் மக்களை ஏமாற்றுவதற்கு இந்த முறைகள் அனைத்தையும் பயன்படுத்துகின்றனர். எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.