சென்னை சிந்தாதிரிப்பேட்டை மின்னணு வாக்குப்பதிவு எந்திர கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு எந்திரங்கள், தொகுதி வாரியாக ஒழுங்குபடுத்தப்பட்டு தேர்தல் பணிக்குத் தயாராகும் பணிகள் வேகமடைந்துள்ளன. இந்த முக்கிய கட்டத்தை சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி குமரகுருபரன் நேற்று அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.

முதற்கட்டமாக ஆர்.கே.நகர், பெரம்பூர், வில்லிவாக்கம், சைதாப்பேட்டை, தியாகராயநகர், மயிலாப்பூர், வேளச்சேரி, எழும்பூர் உள்ளிட்ட 8 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்களும் வி.வி.பேட் கருவிகளும் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டன. மீதமுள்ள 8 தொகுதிகளுக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
அனைத்து 16 தொகுதிகளிலும் பாதுகாப்பு அறைகள் தயார் நிலையில் இருப்பதுடன், எந்திரங்கள் சென்றதும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் சீல்கள் திறந்து மீண்டும் பாதுகாப்பாக வைக்கப்படும். வாக்குப்பதிவுக்கு முந்தைய நாளில் அவை திறக்கப்பட்டு, ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு கடும் காவல் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படும்.
இதனுடன், தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடுமையாக அமலில் இருப்பதை அதிகாரிகள் மீண்டும் நினைவூட்டியுள்ளனர். அரசியல் கூட்டங்கள், பேரணிகள் நடத்த விரும்பும் கட்சிகள் சுவிதா இணையதளம் மூலம் குறைந்தது 48 மணி நேரத்திற்கு முன்பே அனுமதி பெறுவது கட்டாயம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
முறையான பதிவு செய்தால் அனுமதி வழங்கப்படும் என்றும், விதிமுறைகளை பின்பற்றாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், மேடை அமைத்து பெரிய அளவில் நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டால் பொது பணித்துறை அனுமதி, காவலர்களின் எதிர்ப்பு இல்லை என்ற சான்று உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் கட்டாயம்.
இணையதளம் மூலம் வரும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, அனைத்து நிபந்தனைகளும் பூர்த்தியாக இருந்தால் சில மணி நேரங்களிலேயே அனுமதி வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சென்னையில் தேர்தல் பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருவதுடன், 19,500 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முதல்கட்ட பயிற்சி நாளை தொடங்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.