தமிழகத்தின் 17-வது சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பிரதான அரசியல் கட்சிகளான அ.தி.மு.க மற்றும் தி.மு.க இடையே இலவச அறிவிப்புகள் குறித்த போட்டி தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே கடந்த காலத் தேர்தல்களில் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, மிக்சி, கிரைண்டர் போன்ற இலவசப் பொருட்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், இந்த முறை அ.தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் “வீட்டுக்கு ஒரு பிரிட்ஜ்” வழங்கப்படும் என்ற அதிரடி வாக்குறுதியை அளித்துள்ளது.
இது வாக்காளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், எதிர்க்கட்சியின் இந்த வியூகத்தை முறியடிக்க ஆளுங்கட்சியான தி.மு.கவும் தயாராகி வருகிறது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், வரும் ஏப்ரல் 2-ம் தேதி வெளியிடப்பட உள்ள தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையில், ஒவ்வொரு வீட்டிற்கும் “எல்.இ.டி டிவி” வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
மேலும், திருச்சியைத் தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக அறிவிக்கும் முக்கிய வாக்குறுதியும் அதில் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் 3-ம் தேதி திருவாரூரில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்க உள்ள நிலையில், இரு கட்சிகளின் இந்த “இலவசப் பொருட்கள்” அறிவிப்புகள் தேர்தல் களத்தில் பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளன.