இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க 27 ஏப்ரல் 2026 கடைசிநாளாகும்.
விண்வெளிப் பொறியியல் (Aerospace Engineering), தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு (Data Science and AI), மின்சார வாகனங்கள் (Electric Vehicles), ரோபோட்டிக்ஸ் (Robotics), செமிகண்டக்டர் பொருட்கள் தொழில்நுட்பம் (Semiconductor Materials Technology), கடல்சார் பொறியியல் (Ocean Engineering) உள்ளிட்ட பல்வேறு துறைகளில் எம்.டெக். படிப்புகளை ஐஐடி சென்னை வழங்குகிறது.
இதுதவிர, ஆங்கில ஆய்வுகள் (English Studies), வளர்ச்சி ஆய்வுகள் (Development Studies), பொருளாதாரம் (Economics), பொதுக் கொள்கை (Public Policy) ஆகியவற்றில் எம்.ஏ. படிப்புகளையும் இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களில் எம்.எஸ்சி. படிப்புகளையும் இக்கல்வி நிறுவனம் வழங்குகிறது.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க 27 ஏப்ரல் 2026 கடைசி நாளாகும். விண்ணப்பதாரர்கள் தங்களின் தகுதி வரம்புகள், பாடப்பிரிவு விவரங்கள், விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகளை https://mtechadm.iitm.ac.in என்ற இணைய முகவரியில் காணலாம்.
எம்.டெக், எம்.ஏ. மாணவர் சேர்க்கை விவரங்கள், ‘கோப்’ (Common Offer Acceptance Portal) இணையதளத்தில் வெளியிடப்படும். 2026 மே இரண்டாவது வாரத்தில் முதல் சுற்று மாணவர் சேர்க்கை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் 2026 ஜூலையில் மாணவர் சேர்க்கைக்கு நேரில் வரவேண்டியிருக்கும். 27 ஜூலை 2026 அன்று வகுப்புகள் தொடங்கும்.
இதுகுறித்து ஐஐடி சென்னை பாடப்பிரிவுகளுக்கான டீன் பேராசிரியர் பிரதாப் ஹரிதாஸ் கூறும்போது, “பொறியியல், தொழில்நுட்பம் ஆகியவற்றில் முக்கியமான பல்வேறு துறைகளை உள்ளடக்கிய 34 விதமான எம்.டெக்., படிப்புகளை இக்கல்வி நிறுவனம் உள்ளகப் பயிற்சி வாய்ப்புகளுடன் வழங்குகிறது. நான்கு பாடப்பிரிவுகளில் எம்.ஏ., படிப்புகளையும் வழங்குகிறோம். எம்.டெக்.கில் மொத்தம் 735 இடங்களும், எம்.ஏ.வில் 100 இடங்களும் உள்ளன. நாடு முழுவதிலும் இருந்து ‘கேட்’ தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களை இப்பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம்’’ என்று தெரிவித்தார்.
2024, 2025, 2026ஆம் ஆண்டுகளில் ‘கேட்’ தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்,
CGPA 8.0 மற்றும் அதற்கு மேல் உள்ள ஐஐடி பட்டதாரிகள்,
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களால் ஸ்பான்சர் செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள்,
பாதுகாப்புத் துறையால் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள்
ஆகியோர் தகுதிப் பட்டியலில் அடங்குவர்.
எம்.எஸ்சி. பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை JAM தேர்வு மூலம் நடத்தப்படும், தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கான எம்.ஏ. மாணவர் சேர்க்கையும் ‘கேட்’ தேர்வு மூலமாகவே மேற்கொள்ளப்படும்.
தகுதியுள்ள இந்திய மாணவர்களுக்கு பகுதிநேர கற்பித்தல் உதவித் தொகையாக மாதம் ரூ.12,400 நிதியுதவி வழங்கப்படுகிறது. திறமையான மாணவர்களை ஊக்குவிக்கப் பல மதிப்புமிக்க உதவித்தொகைத் திட்டங்களையும் ஐஐடி சென்னை வழங்குகிறது.
அணுசக்தித் துறை பட்டதாரி உதவித்தொகை, ‘கேட்’ தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.35,000 உதவித்தொகையையும், படிப்பை வெற்றிகரமாக முடித்தவுடன் அணுசக்தி நிறுவனங்களில் உறுதி செய்யப்பட்ட வேலைவாய்ப்பையும் வழங்குகிறது.