மகனைக் காப்பாற்ற `நரபலி' கொடுக்கப்பட்ட மகள் - ரத்தத்தை எடுத்து சடங்கு... அதிரவைத்த தாய்!
Vikatan April 02, 2026 09:48 PM

ஜார்க்கண்ட் மாநிலம், ஹசரிபாக் பகுதியில் பெண் ஒருவர் செய்த காரியம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அப்பெண், உடல் நலமில்லாத தன்னுடைய மகனைக் காப்பாற்ற சொந்த மகளை நரபலி கொடுத்துள்ளார். ரேஷ்மி தேவி என்ற அந்தப் பெண்ணுக்கு (55) 12 வயதில் ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இதில் ரேஷ்மியின் மகனுக்கு சமீபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து ரேஷ்மி அங்கு பில்லி, சூனியம் செய்யக்கூடிய மந்திரவாதி சாந்தி தேவி என்பவரைச் சென்று பார்த்தார். உடனே சாந்தி தேவி, `குடும்பத்தில் இருக்கும் பிரச்னைகள் தீரவும், மகனின் உடல்நலம் சரியாகவும் உனது 12 வயது மகளை நரபலி கொடுக்க வேண்டும்' என்று தெரிவித்தார்.

மேலும், `உனது 12 வயது மகளை தெய்வம் ஆட்கொண்டு இருப்பதால், அவரை பலி கொடுத்தால் உனது மகனைக் காப்பாற்ற முடியும். அதோடு உனது மகனைக் காப்பாற்ற கன்னிப்பெண்ணை பலியிடுவது அவசியம்' என்றும் தெரிவித்தார்.

ரேஷ்மி தேவியும் அதற்கு சம்மதித்தார். இதையடுத்து கடந்த 24ம் தேதி, 12 வயது பெண்ணை ரேஷ்மி தனது காதலன் பீம்ராம் துணையோடு கொலைசெய்தார். ரேஷ்மி தனது மகளின் கால்களைப் பிடித்துக்கொண்டார். பீம்ராம் கழுத்தை நெரித்துக் கொலைசெய்தார்.

அதன் பிறகு அருகில் நின்ற சாந்தி தேவி கொலைசெய்யப்பட்ட பெண்ணின் அந்தரங்க உறுப்பில் மரக்குச்சியைச் செலுத்தினார். அதோடு சடங்குகளுக்காக ரத்தம் எடுக்க 12 வயது பெண்ணின் தலையில் பீம்ராம் தாக்கினார். அதன் பிறகு சிறுமியின் உடலை பள்ளிக்கு அருகில் உள்ள மூங்கில் தோட்டத்தில் புதைத்துவிட்டனர். அதனைத் தொடர்ந்து ரேஷ்மி தனது மகளைக் காணவில்லை என்று கூறி, போலீஸில் புகார் கொடுத்தார்.

அதனடிப்படையில் போலீஸார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பல அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்தன. இது குறித்து போலீஸ் அதிகாரி அஞ்சனி கூறுகையில், ''ரேஷ்மிக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மந்திரவாதி சாந்தி தேவியுடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. அப்போது ரேஷ்மி தனது மகன் பிரச்னையையும், குடும்பப் பிரச்னையையும் தெரிவித்துள்ளார். உடனே, `இதற்கு கன்னிப்பெண்ணை பலியிட வேண்டும். உனது 12 வயது மகளை இதற்காக பலியிடலாம்' என்று தெரிவித்தார். ரேஷ்மியும் அதற்கு சம்மதித்து ராம் நவமியையொட்டி துர்கா அஷ்டமியில் தனது காதலனுடன் மகளை மந்திரவாதி வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

அங்கு வழக்கமான பூஜைகள் நடந்தன. அதன் பிறகு அங்குள்ள மூங்கில் தோட்டத்திற்கு அழைத்துச் சென்று பீம்ராம் மற்றும் ரேஷ்மி சேர்ந்து கொலை செய்துள்ளனர். சடங்குகளை செய்த பிறகு உடலை அங்கேயே போட்டுவிட்டு வந்துவிட்டனர். பீம்ராமும், ரேஷ்மியும் கடந்த 10 ஆண்டுகளாகத் தொடர்பில் இருக்கின்றனர். ரேஷ்மியின் கணவர் மகாராஷ்டிராவில் வேலை செய்கிறார். எப்போதாவதுதான் ஊருக்கு வருவது வழக்கம்'' என்று தெரிவித்தார். குற்றவாளிகள் மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.