துபாயில் உள்ள Oracle, அமேசான் நிறுவனங்களை ஈரான் தாக்கியது உண்மையா? விளக்கம் அளித்த அதிகாரிகள்..!
WEBDUNIA TAMIL April 03, 2026 12:48 PM

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் நகரில் அமைந்துள்ள அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான Oracle டேட்டா மையம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக வெளியான செய்திகளை துபாய் அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை, துபாயில் உள்ள Oracle மற்றும் பஹ்ரைனில் உள்ள அமேசான் டேட்டா மையங்களை இலக்கு வைத்து தாக்கியதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இந்த செய்திகளை போலி செய்தி என வர்ணித்துள்ள துபாய் ஊடக அலுவலகம், இதில் எவ்வித உண்மையும் இல்லை என தெளிவுபடுத்தியுள்ளது. அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய நிறுவனங்கள் மீது ஈரான் தொடர் அச்சுறுத்தல்களை விடுத்து வரும் நிலையில், இத்தகைய வதந்திகள் பரவியுள்ளன.

குறிப்பாக மைக்ரோசாப்ட், கூகுள், மெட்டா உள்ளிட்ட நிறுவனங்கள் ஈரானின் இலக்கு பட்டியலில் இருப்பதாக கூறப்படுகிறது. பிராந்தியத்தில் பதற்றம் நிலவும் வேளையில், அதிகாரப்பூர்வமற்ற தகவல்களை பகிர வேண்டாம் என அமீரக அதிகாரிகள் பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.

டேட்டா மையங்களின் முக்கியத்துவம் அதிகரித்து வரும் சூழலில், வளைகுடா நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவை சிதைக்க இத்தகைய தாக்குதல் முயற்சிகள் அல்லது வதந்திகள் பயன்படுத்தப்படுவதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

Edited by Siva

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.