மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழலால் முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளது. இது தொடர்பாக இங்கிலாந்து கூட்டிய 60 நாடுகளின் உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் இந்தியா தனது கவலையை பதிவு செய்துள்ளது. இப்போரில் ஹார்முஸ் நீரிணையில் குடிமக்களை இழந்த ஒரே நாடு இந்தியாதான் என்று வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி சுட்டிக்காட்டினார்.
வெளிநாட்டு சரக்கு கப்பல்களில் பணியாற்றிய மூன்று இந்திய மாலுமிகள் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர். சுமார் ஒரு கோடி இந்தியர்கள் வளைகுடா நாடுகளில் வசிக்கும் நிலையில், அவர்களின் பாதுகாப்பு இந்தியாவின் முதன்மையான முன்னுரிமையாகும்.
ஈரானில் சிக்கியிருந்த 204 இந்தியர்கள் அஜர்பைஜான் எல்லை வழியாக பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். கடல்சார் வணிக பாதைகள் முடக்கப்பட்டுள்ளதால் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.
எனவே, போரை நிறுத்திவிட்டு தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. வளைகுடா பிராந்தியத்தில் அமைதி நிலவினால் மட்டுமே உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் இந்தியா தெரிவித்துள்ளது.
Edited by Siva